Published : 07 Sep 2022 02:12 PM
Last Updated : 07 Sep 2022 02:12 PM

நீட் தேர்வு முடிவுகள் | மாணவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: "நீட் தேர்வெழுதிய உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் அவர்களைக் கடிந்து கொள்வது போன்ற விஷயங்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை ஆய்வு செய்த பின்னர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், " பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் விரும்பியது போல, உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் குழந்தைகளை திட்டுவது, கடிந்து கொள்வது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வு எப்போது வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளலாம். தமிழக முதல்வர் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.

வேறு வழியில்லாத காரணத்தால், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இந்த ஆண்டு அதிகமான அளவில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதிகமானவர்கள் தேர்வு எழுதினார்கள் என்பதற்காக நீட் தேர்வை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம் இல்லை. எப்படியாவது மருத்துவப் படிப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆதங்கத்தில் தேர்வை எழுதியிருக்கின்றனர்.

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறாத குழந்தைகளுக்கு யாருக்காவது இன்னமும் மன அழுத்தம், மன நெருக்கடி போன்ற குளறுபடிகள் இருக்குமானால் உடனடியாக அந்தந்த மாவட்டத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற குழு, குறிப்பாக மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மன நல ஆலோசகர் தலைமையில் ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழுவின் எண்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு யாராவது இந்த மன அழுத்தம் தொடர்பான பிரச்சினை இருந்தால், உடனடியாக இந்தக் குழுவினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x