Published : 07 Sep 2022 11:54 AM
Last Updated : 07 Sep 2022 11:54 AM
திருப்பூர்: கரோனா கால பொது முடக்கத்தின் போதும் தொய்வின்றி மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி புகட்டிய திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுடன், திருப்பூர் திரும்பி உள்ளார் ஆசிரியர் ஐயப்பன் (37). திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஈசல்தட்டு செட்டில்மன்ட் பகுதியை சேர்ந்த லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியர். திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் வசித்தாலும், உடுமலையில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
நல்லாசிரியர் விருதுடன் ஆசிரியர் ஐயப்பன் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: ''என்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக, கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் தங்கி தான் பிளஸ் 2வரை படித்தேன். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாரதிபுரம் நடுநிலைப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வி கண்ணம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வி இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். தாய், தந்தையர் இருவரும் கூலித் தொழிலாளர்கள். என்னால் கல்லூரியில் உடனே சேரமுடியவில்லை. பிளஸ்2 வில் 1010 மதிப்பெண் பெற்றேன். உயர்கல்வியான கல்லூரிக்கு செல்ல எனக்கு வசதி இல்லை.
அப்போது எனது இருகூர் பள்ளி ஆசிரியர் முருகேசன் (தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்) என்னை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டார். அவரும், அவரது நண்பர்கள் வாயிலாக படிப்புக்கான செலவை முழுமையாக ஏற்றனர். இதையடுத்து படிப்பை முடித்து, 2008-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக, திருமூர்த்திமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்ந்தேன். தொடர்ந்து லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பணிக்கு சேர்ந்தேன். 1 முதல் 5-ம் வகுப்பு வரை, 20 மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள்.
காலையில் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் போது, அங்கு தங்கியே படிக்கும் உண்டு உறைவிடப்பள்ளி என்பதால், பகல் முழுவதும் பள்ளியாகவும், இரவில் விடுதியாகவும் செயல்படும். போதிய கட்டிட வசதி இல்லை. பள்ளிக்கு காலையில் செல்லும்போது, தலையணை, பாய் மற்றும் இரவு சாப்பிடும் உணவு உள்ளிட்டைவகளால் அசுத்தமாக அப்படியே இருக்கும். அவற்றை சுத்தம் செய்து, காலையில் வகுப்புகளை தொடங்குவோம். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து, பள்ளிக்கு கூடுதலாக கட்டிடம் பெற்றோம். தற்போது கூடுதல் கட்டிடத்துடன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்ட எல்லை மட்டுமின்றி கேரள மாநிலத்துக்கும் எல்லையாக இருப்பதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வால்பாறை அட்டகட்டி, அய்யர்பாடி, குறுமலை, குழிப்பட்டி என பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளில் இருந்து மாணவர்கள் தற்போது தங்கி படித்து வருகின்றனர். இதற்கிடையே கரோனா பெருந்தொற்று பரவியதால், பள்ளிகள் முடங்கின. உண்டு உறைவிடப்பள்ளியும் ஊரோடு ஒட்டுமொத்தமாக உறைந்திருந்தது சில நாட்கள். அதன்பின்னர் அங்கு போதிய மின்சாரம், அலைபேசி உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பதை அறிந்து வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் சென்று, அங்கு குழந்தைகளுக்கு நேரில் பாடம் நடத்தினேன்.
அவர்களுக்கு நேரில் சென்று தொடர்ச்சியாக பாடம் எடுத்ததால், பிற குழந்தைகள் போல் கல்வியில் ஏற்படும் இடைவெளி குறைந்தது. கரோனா காலம் முழுவதும் தொடர்ச்சியாக அங்கு தங்கி பாடம் எடுத்தேன். அவர்களுக்கு அலைபேசி, இணையதளம் உள்ளிட்ட வசதிகள் எதுவும் அங்கு இல்லை. போக்குவரத்தும் இல்லாததால், ஒருவிதமான பயத்தோடுதான் மலையில் உள்ள அவர்களின் குடியிருப்புக்கு செல்வேன். அவர்களுக்கு கல்வியில் எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டேன். தொடர்ந்து அங்கிருக்கும் குழந்தைகளின் உடைமைகளை துவைத்து போடுவது, அவர்களுக்கு உரிய முறையில் முடி திருத்தம் என பல்வேறு பணிகளையும் செய்தேன்.
வாய்ப்புகள் கிடைக்காததால், அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும், என்ற நம்பிக்கையோடு கரோனா காலத்தில் உழைத்தேன். இதனை சக நண்பர்கள் வெளியே சொல்லி பாராட்டத் தொடங்கியது தான், இன்றைக்கு அரசின் விருதை கையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது'' என்றார்.
இந்த விஷயம் வெளிய தெரிய தொடங்கியதும், பள்ளிக்கு பலரும் உதவி செய்ய முன் வந்தனர். அவர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான பொருட்களை பெற்றோம். தற்போது 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் மாவட்ட கருத்தாளராகவும் உள்ளார் ஆசிரியர் ஐயப்பன். ''திருப்பூரில் வசிக்கும் மனைவி, இரண்டு குழந்தைகள் பிரிந்து வேலைக்கு சென்று வருவது ஒருவிதமான குடும்பத்தினருக்கு கவலை தான். ஆனால் அதேசமயம் அங்கிருக்கும் குழந்தைகள் அத்தனை அன்போடு பழகுவதும், அவர்களுக்கு தேவையான கல்வியைத் தருவதும் கட்டாயம் என்பதால், தற்போதைய அரசின் அங்கீகாரமும் குடும்பத்தின் கவலையை காணாமல் போக செய்துள்ளது'' என சிலாகிக்கிறார் ஆசிரியர் ஐயப்பன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT