Published : 07 Sep 2022 08:40 AM
Last Updated : 07 Sep 2022 08:40 AM
ஸ்ரீபெரும்புதூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக தமிழகம் வந்த அவர் இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்தார். அங்கு அவர் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்கு தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர் கார் மூலம் கன்னியாகுமரி சென்றடைகிறார்.
குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து நடைபயணத்தை ராகுல் தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து 600 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு திரண்டிருக்கும் தொண்டர்களிடையே பேசுகிறார்.
பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT