Published : 07 Sep 2022 06:40 AM
Last Updated : 07 Sep 2022 06:40 AM
சென்னை: தமிழ்நாட்டுக்கான மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அதிக அளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு, திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். தமிழகத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியமாகும்.
அதேபோல, மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப் பெண் திட்டம், 7.5% இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுதவிர, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன.
தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தினால், இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு பதிவுசெய்ப்பட்டுள்ளது. சுபாஷ் சர்க்கார் கல்வித் துறை இணையமைச்சர் என்பதால், அதுகுறித்த அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மருத்துவர்கள் தனியே தொழில் தொடங்குவதுபோல, பொறியாளர் உள்ளிட்டோரும் தொழில்முனைவோராக மாற வேண்டும். மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு பதிவுசெய்ப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT