Published : 07 Sep 2022 06:50 AM
Last Updated : 07 Sep 2022 06:50 AM
சென்னை: வேளாண்மைத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.125.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மைத் துறை சார்பில் காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஓசூர், ஊத்தங்கரை, அகஸ்தீஸ்வரம், ஆலங்காயம், உச்சிப்புளி, முதுகுளத்தூர், கொங்கணாபுரம், குத்தாலம், நாகமங்கலத்தில் ரூ.22.80 கோடியில், 11 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களும், ரூ.3 கோடியில் கடலூரில் மண், ஆய்வுக்கூடம், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம், மதுரை, பரமக்குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறை சார்பில் நாகை மாவட்டம் தெற்கு பால் பண்ணைச்சேரியில் ரூ.95 லட்சத்தில் தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் ரூ.28.75 கோடியில் ராமநாதபுரம் எட்டிவயலில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம், குன்னத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தென்காசி பாவூர்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2,000 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, மதுரை கோ-புதூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை வணிக சந்தை மையம் அமைக்கப்பட்டுள்ளன.
நவீனத் தொழில்நுட்பங்கள் தொடர்பாக வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள், விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க திருச்சியில் ரூ.2 கோடியில் பயிற்சி மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, தேனி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இயங்கும் வேளாண்மைக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், பேச்சிப்பாறை தோட்டக்கலை கல்வி மையத்தில் ரூ.54.88 கோடியில் பல்நோக்கு அரங்கம், உடற்பயிற்சிக் கட்டமைப்பு வசதிகள், நூலகம், ஒலி ஒளி ஆய்வகம், படிப்பு மையம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு மொத்தம் ரூ.125.28 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வேளாண் துறைச்செயலர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT