Published : 07 Sep 2022 07:02 AM
Last Updated : 07 Sep 2022 07:02 AM
சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சுரங்கம் தோண்டும் மேலும் 2 ராட்சத இயந்திரங்கள் சீனாவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளன. மாதவரம் - புரசைவாக்கம் இடையே இரட்டை சுரங்கப்பாதை உருவாக்கும் பணியில் இவை பயன்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடியில் நடைபெறுகிறது. மாதவரம் - கெல்லீஸ் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - தியாகராயநகர் - பூந்தமல்லி வரையிலான 4-வதுவழித்தடம், மாதவரம் - மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் வரையிலான5-வது வழித்தடம் ஆகிய 3 வழித்தடங்களில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், 42.6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதையில் 48 நிலையங்கள் இடம்பெற உள்ளன. சிலஇடங்களில் உயர்மட்டப் பாதைகளும் அமைய உள்ளன. இப்பணிகளை 2026-ம் ஆண்டுக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
உயர்மட்டப் பாதையைவிட சுரங்கப் பாதை பணி சவாலானது என்பதால், அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. சுரங்கப்பாதை அமைக்க, சுரங்கம் துளையிடும் 23 இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனா, ஜெர்மனியில் இருந்து இந்த இயந்திரங்கள் வருகின்றன.
முதல்கட்டமாக, சுரங்கம் துளையிடும் முதல் இயந்திரம் சீனாவில்இருந்து கடந்த ஜூன் மாத இறுதியில் மாதவரம் வந்தடைந்தது. 2-வது இயந்திரம் ஆகஸ்ட் 3-வதுவாரத்தில் வந்தது. மாதவரம் மற்றும்பசுமைவழிச் சாலையில் இவைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் 2 இயந்திரங்கள் சீனாவில் இருந்து தற்போது சென்னைக்கு வந்துள்ளன. சுங்கத்துறையின் ஒப்புதலுக்கு பிறகு, இவை மாதவரத்துக்கு அனுப்பப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் அடுத்த வேணுகோபால் நகரில் இருந்து புரசைவாக்கம் கெல்லீஸ் வரை 9 கி.மீ.தூரத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. சீனாவில் இருந்து வந்துள்ள 2 ராட்சத இயந்திரங்கள் இப்பணிக்கு பயன்படுத்த உள்ளன.
மாதவரம் பால் பண்ணை காலனி- தபால் பெட்டி நிலையம் இடையிலான சுரங்கப்பாதை பணிக்காக, முதலில் வந்த இயந்திரம் அடுத்தமாதம் பயன்படுத்தப்படும். இதையடுத்து, மாதவரம் நெடுஞ்சாலை - தபால்பெட்டி நிலையம் இடையிலான சுரங்கப்பாதை பணிக்கு 2-வது இயந்திரம் பயன்படுத்தப்படும்.
இங்கு அமைய உள்ள மெட்ரோரயில் நிலையங்களின் நுழைவுவாயில், வெளிப்பகுதியின் புறச்சுவர் ஆகியவற்றை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாதவரம் - சிறுசேரி 3-வது வழித்தட சுரங்கப்பாதை பணியில், சுரங்கம் துளையிடும் 15 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT