Published : 06 Sep 2022 10:51 PM
Last Updated : 06 Sep 2022 10:51 PM
கோவை: கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திமுக அரசு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், தங்களது சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த மனுவினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் அறிவித்தார். கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடந்த வாரம் தனது தொகுதி பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து எம்.எல்.ஏக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தனித்தனியாக அளித்தனர்.
பழுதடைந்துள்ள சாலைகள்
அதைத் தொடர்ந்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது.
எதிர்கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி எங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து மனுவாக ஆட்சியரிடம் அளித்துள்ளோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் எந்த சாலையும் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. மழைக்காலங்களில் வாகன ஓட்டுநர்கள் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு பழுதடைந்த சாலைகளை முதலில் சீரமைக்க வேண்டும்.
மாவட்டத்தில் மேம்பாலங்கள் கட்டும் பணியை வேகமாக முடிக்க வேண்டும். வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அங்கேயே பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும். இதுதொடர்பாக ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, லாரிப்பேட்டை அமைக்க திட்டமிட்டிருந்தோம். வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டம் தொடர வேண்டும். இதை செயல்படுத்தும் போது மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
குடிநீர் திட்டப்பணிகள்
மெட்ரோ ரயில் திட்டம், 3-ம் கூட்டுக்குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி, அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம், 2-ம் அத்திக்கடவு திட்டம் ஆகியவற்றை விரைவாக முடிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் குடிநீர் 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டது. தற்போது 10 நாட்கள், 15 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நீர் இருந்தும் சரிவர விநியோகிப்பதில்லை. சீரான குடிநீர் விநியோகத்துக்கு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவையில் நாங்கள் கொடுத்துள்ளோம். நாங்கள் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அத்திட்டங்களை அரசு தொடர்ந்து செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளோம். ஒன்றரை வருடங்களில் திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அவர்கள் திட்டப்பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT