Published : 06 Sep 2022 07:36 PM
Last Updated : 06 Sep 2022 07:36 PM
சென்னை: நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணியில் வேளாண் துறை அமைச்சரின் மைத்துனர் தலையீட்டை தடுக்கக் கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் உள்ள வாக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், இந்த ஆண்டுக்கான கொள்முதல் பணிகள் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது.தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வத்தின் மைத்துனரான ஆர்.கனகசபை என்பவர் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தடுத்து வருகிறார். அவரது ஆட்கள் மூலம் மட்டுமே நெல்லை ஏற்றி இறக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார் எனக் கூறி, 14 சுமை தூக்கும் தொழிலளர்கள் சார்பாக சி.பட்டுசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், "தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், தொழிலாளர் நலஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆகஸ்ட் 22-ம் தேதி இதுகுறித்து புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதார பணியில், அமைச்சரின் மைத்துனர் தலையிடுவதை தடுக்க வேண்டும். வாக்கூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT