Published : 06 Sep 2022 05:24 PM
Last Updated : 06 Sep 2022 05:24 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியை உடனே திறக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட நிலையில், இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் உறுதியளித்ததால் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கணியமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த கலவரத்தால் பள்ளி வளாகம் சேதமடைந்ததைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி திறக்கப்படாமல் உள்ளது. இதனிடையே மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகள் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இருப்பினும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாணவ, மாணவியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக பள்ளியை திறக்கவேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 நாட்களில் மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று தனியார் பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பள்ளியைத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாதததால், அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆட்சியர் மாலை வருவார் என தெரிவித்தனர். அப்போது 10 நபர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர் என கள்ளக்குறிச்சி டிஎஸ்பி புகழேந்தி கணேசன் தெரிவித்தார். ஆனால், அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் காவல் துறையினருக்கும், பெற்றோர் தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
மாலை ஆட்சியர் ஷ்ரவன்குமார் வந்ததும், பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். 10 பேர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ''பள்ளி உடனடியாக திறக்க வேண்டும், மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதால் மாணவர்களுடைய கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. மற்ற பள்ளி மாணவ மாணவிகள் நேரடி வகுப்பில் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை'' எனக் கூறினர். இதைத்தொடர்ந்து. ''விரைவில் பள்ளி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் இரண்டு நாட்களில் பள்ளி சரி செய்யும் பணி, மறு சீரமைப்பு பணி தொடங்க உத்தரவு நகல் அளிக்கப்படும்'' என உறுதியளித்தார். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT