Published : 06 Sep 2022 03:00 PM
Last Updated : 06 Sep 2022 03:00 PM
சென்னை: " திருச்சி பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையைத் திறப்பதற்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். மேலும் தாமதித்தால் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அவரது ரசிக பெருமக்களின் முன்னிலையில் நான் முன்னின்று சிலையை திறப்பேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையைத் திறப்பதற்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நடிப்புக் கலையில் தலைமை பல்கலைக்கழகமாக விளங்கிய ஆகப்பெரும் தமிழ்க் கலைஞரின் சிலையினைத் தமிழ்நாட்டிலேயே திறக்க முடியாத அவல நிலை நிலவுவது தமிழ் இனத்திற்கே ஏற்பட்ட பேரவமானமாகும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர் பெருமக்களால் திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டுப் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட சிலையைத் திறக்க பலமுறை முயற்சித்தும் பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் அனுமதி தரப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் திமுக அரசும், கடந்த அதிமுக அரசினைப்போலவே சிலையைத் திறக்க அனுமதி மறுப்பது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மக்கள் அனைவரிடமும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சிலையைத் திறக்கவேண்டி ரசிகர்கள் சார்பில் ஆட்சியாளர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பலமுறை முறையிட்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அனுமதி அளிக்கப்படாதது அவரது மங்காப் புகழ் மீதான காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை. இந்திமொழி திரைப்பட நடிகர்களுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட அயல் நாடுகள்கூடச் சிலை திறந்து, மரியாதை செய்கின்றன. தமிழ்நாட்டிலும் வேற்றுமொழி நடிகர், நடிகைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, தமிழ்நாடு அரசு தம் சொந்த மண்ணின் மகனது சிலையைத் திறக்க அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது மறைந்த அந்த மகத்தான கலைஞனுக்குச் செய்யும் மாபெரும் அவமரியாதையாகும்.
ஆகவே, இந்த நூற்றாண்டின் இணையற்ற திரைக் கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சி பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் திறப்பதற்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். மேலும் தாமதித்தால் நடிகர் திலகத்தின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அவரது ரசிக பெருமக்களின் முன்னிலையில் நான் முன்னின்று சிலையை திறப்பேன் என தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT