Published : 06 Sep 2022 12:46 PM
Last Updated : 06 Sep 2022 12:46 PM
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்குகளுக்கு சீரான விநியோகம் செய்யாததால், சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இரண்டாவது நாளாக இன்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். இந்தநிலையில், கடந்த 108 நாட்களுக்கும் மேலாக சென்னையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் 102 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல் இருப்பு இல்லையென அந்த பெட்ரோல் பங்க்குகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பாரத் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பபட்டுள்ளன.இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், லோடு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் சேவை முடக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT