Published : 06 Sep 2022 06:15 AM
Last Updated : 06 Sep 2022 06:15 AM

150 நாட்களில் 3,500 கி.மீ. கடந்து காஷ்மீர் வரை செல்கிறார்; ராகுல் காந்தி நடைபயணம் நாளை தொடக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை நடைபயணம் தொடங்குகிறார். குமரியில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்துகாஷ்மீர் வரையான நடைபயணத்தை ராகுல்காந்தி எம்.பி. நாளை (7-ம் தேதி) தொடங்குகிறார். இதற்காக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைக்கப்படும் பொதுக்கூட்ட பந்தல் மற்றும் மேடை பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிடபார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து கே.எஸ். அழகிரிவிடுத்துள்ள அறிக்கை: ராகுல்காந்தி எம்.பி. நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூர 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இப்பயணத்தின்போது மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் இப்பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை கண்டுணர்கிற முயற்சியே இப்பயணம்.

விலைவாசி உயர்வால் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் கடனில் மூழ்கி இருக்கிறார்கள். ஜாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள்.

மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி பங்கீட்டுத் தொகை முறையாக வழங்குவதில்லை. அரசு வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகின்றன. 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. 20 வயது முதல் 24 வயதுவரையிலான 42 சதவீத இளைஞர்கள் எந்த வேலையுமின்றி உள்ளனர். வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீரவில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.11 லட்சம்கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம்கோடி அளவுக்கு வரி விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. தொழில் அதிபர்கள் வழங்கிய நன்கொடையில் 85 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது.

சாதாரண மக்களிடமிருந்து எரிபொருள் வரியாக ரூ. 27 லட்சத்து 50 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. சில தொழிலதிபர்களின் வருமானம் ஓராண்டில் ரூ. 30 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய அழைக்கிறோம்.

இந்திய ஒற்றுமை பயணத்தில் அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நாளை மாலை 4 மணியளவில் ராகுல்காந்தியிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்குகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார். இந்த நடைபயணம் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி இன்று சென்னை வருகை

ராகுல்காந்தி இன்று இரவு சென்னை வருகிறார். பழவந்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை காலை 7 மணிக்கு பெரும்புதூரில் உள்ள தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ராகுல் நடைபயணம் கன்னியாகுமரியில் நாளை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காமராஜ் மண்டபத்துக்கு சென்ற பிறகு, காந்தி மண்டபத்துக்கு செல்கிறது. அங்கு முதல்வர் ஸ்டாலினும் நடைபயணத்தில் இணைந்து கொள்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறார் என கூறியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x