Published : 06 Sep 2022 07:15 AM
Last Updated : 06 Sep 2022 07:15 AM

செங்கல்பட்டு தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மைய நூலகம் ரூ.6 கோடியில் புதிதாக கட்ட திட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட மைய நூலகம் பழைய ரயில் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமையவுள்ளது. இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான மைய நூலகம் செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மைய நூலகம் இல்லாத நிலை இருந்தது. மாவட்ட மைய நூலகத்தில் 1 லட்சத்து 72,225 புத்தகங்கள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட மைய நூலகம் என்ற பெயரில் இருந்தாலும் அது செங்கல்பட்டு பகுதியில் இருந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் அதனால் பயன் இல்லை.

மற்ற நூலகங்களும் குறைவான அளவிலேயே உள்ளன. 25 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் 8 லட்சத்து 57,205 புத்தகங்கள் உள்ளன. இவை இல்லாமல் கிராமப்புற நூலகங்கள் 24 உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 73,578 புத்தகங்கள் உள்ளன. பகுதி நேர நூலகங்கள் 13-ல் 12,220 புத்தகங்கள் உள்ளன.

இதன்படி ஒரு மாநகராட்சி, 5 வட்டங்கள், 479 ஊராட்சிகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62 நூலகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து மாவட்ட மைய நூலகம் செங்கல்பட்டிலும், ஒரு மொபைல் நூலகம் இரு மாவட்டங்களுக்கும் சேர்த்தும் செயல்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள மக்கள் 11 லட்சத்து 56,680 பேரில் 8 லட்சத்து 34,783 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். எனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மாவட்ட மைய நூலகம் காஞ்சிபுரத்தில் அமைப்பதுடன், கூடுதலாக நூலகங்களை திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இணைந்த மாவட்ட மைய நூலக அலுவலர் மந்திரம் கூறியதாவது: தற்போது காஞ்சிபுரம் மாவட்ட மைய நூலகம் செங்கல்பட்டில் செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் புதிதாக மாவட்ட மைய நூலகம் கட்ட பழைய ரயில் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்துள்ளோம். இதில் 3 மாடி கட்டிடம் கட்ட ரூ.6 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அந்த இடத்தை ஒப்படைத்ததும் அங்கு கட்டிடப்பணிகள் தொடங்கும்.

இந்த நூலகம் செயல்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் அனைவரும் அந்த நூலகத்துக்கு வந்துவிடுவோம். செங்கல்பட்டு மைய நூலகத்துக்கு புதிதாக பணியாளர்கள், நூலக அலுவலர்களை அரசு நியமிக்கும். மாவட்ட மைய நூலகம் செயல்பாட்டுக்கு வந்த உடன் மற்ற நூலகங்களின் தேவை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x