Published : 06 Sep 2022 04:35 AM
Last Updated : 06 Sep 2022 04:35 AM
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து மூன்று மணி நேரம் கொட்டியது.
தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் புதிய புதிய அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. இவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். ஏற்காட்டில் மழை காரணமாக 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரியில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும், சிற்றாறுகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு 9. 30 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
அதிகாலை வரை சாரல் மழை பெய்து, குளுமையான சீதோஷ்ண நிலை நீடித்தது.
கன மழையால் அம்மாப்பேட்டை, பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், திருவாகவுண்டனூர் பைபாஸ் என பல பகுதிகளில் சாலைகளில் சாக்கடை கழிவுடன் மழை நீரும் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோரிமேடு, ஏடிசி நகரில் ஓடை தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து தடைபட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அழகாபுரம் கிரீன்வேஸ் ரோட்டில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம், தேவேந்திர புரத்தில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் ஆட்டோ கவிழ்ந்தது.
அதேபோல, ஏற்காட்டில் பெய்த மழையால், புது ஏரி, கன்னங்குறிச்சி மூக்கனேரி வழியாக மழை நீர் பெருக்கெடுத்துள்ளதால், சேலம் அணைமேடு திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சேலம் மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 70.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்); ஓமலூர் 63, சேலம் 48.8, சங்ககிரி 47.3, காடையாம்பட்டி 20, எடப்பாடி 15, கரியகோவில் 15, பெத்தநாயக்கன் பாளையம் 5, மேட்டூர் 3.2, தம்மம்பட்டி 2, ஆனைமடுவு 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மூக்கனேரி பகுதியில் மேயர் ஆய்வு: சேலம் மாநகராட்சிப் பகுதியில் பெய்த மழையால், மூக்கனேரியில் இருந்து தண்ணீர் வழிந்தோடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்தது. மேயர் ராமச்சந்திரன் மூக்கனேரி பகுதிக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். \
மூக்கனேரிக்கு வரும் மழைநீர் அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லாத வகையில் தண்ணீரை திருமணிமுத்தாற்றுக்கு திருப்பிவிடும் வகையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி, மூக்கனேரி நீர் அணைமேடு பகுதி வழியாக திருப்பி விடப்பட்டு, சாலை, குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT