Published : 05 Sep 2022 08:23 PM
Last Updated : 05 Sep 2022 08:23 PM
ராமேசுவரம்: இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
இலங்கையில் கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரின் போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இலங்கையிலிருந்து இருந்து உலகம் முழுவதும் தமிழ்மக்கள் அகதிகளாக புலம் பெயரத்தொடங்கினர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்துள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR), தமிழக மற்றும் இந்திய அரசுகளின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,547 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். முகாமிற்கு வெளியே உள்ள காவல்நிலையங்களில் பதிவுசெய்து இலங்கைத் தமிழ் அகதிகள் 34,135 பேர் தங்கி உள்ளனர். மேலும் ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் 54 பேர்கள் தங்கி உள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இந்தியாவிற்கு அகதிகளாக புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என “ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” வேண்டுகோள் வைத்திருந்தது. இதுகுறித்து இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இலங்கை திரும்பும் முறையை எளிமைப்படுத்துவதற்காக சிறப்பு குழுவை சமன் ஏகநாயக்க நியமனம் செய்தார். இலங்கை அதிபரின் சிறப்புச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இந்தக்குழுவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், குடிவரவுத் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முகாம்களில் தங்கியுள்ள 3,800 இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாக சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தின் மூலம் பதிவு செய்திருப்பது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது. இது தவிர இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் 158 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT