Last Updated : 05 Sep, 2022 07:33 PM

1  

Published : 05 Sep 2022 07:33 PM
Last Updated : 05 Sep 2022 07:33 PM

“இலவசங்கள் இல்லையெனில் சமத்துவ சமுதாயத்தை நிலைநிறுத்த முடியாது” - எ.வ.வேலு

மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எ.வ.வேலு. மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி: அரசு சார்பில் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் திட்ட செயல்பாடுகளை சிலர் கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கிப் பேசுகையில், ''அரசு மக்கள் நலன் கருதி சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள், மற்றும் 1 முதல் பிளஸ் 2 வரை பாடப்புத்தகங்கள், புத்தகப் பை, சீருடை, காலணி என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் கல்வயை ஊக்குவிக்கும் வகையில் இன்று அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தையும் முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் பெண்களின் உயர்கல்வி எண்ணிக்கை அதிகரிப்பதோடு, குடும்பச்சூழலுக்கு அது பெரும் உதவியாக இருக்கும். இந்த நிலையில் சிலர் அரசு செயல்படுத்தும் இலவலச திட்டங்களை கொச்சைப்படுத்துகின்றனர். அரசு ஏன் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் தான் இதுபோன்று கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களுக்கான வழங்கப்படும் சைக்கிள், புத்தகங்கள், பை, இலவச பஸ் பாஸ், மாத உதவித் தொகை போன்றவை குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும், அதாவது, படிப்புக்காக குடும்பத்தினர் செலவு மிச்சப்படுத்தப்பட்டு, அவை வேறு செலவுகளுக்கு பயன்படுகிறது. நகரத்தில் உள்ளவர்களுக்கும் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள இடையேயான பொருளாதர இடைவெளியை குறைக்கிறது.

இலவசங்கள் இல்லையென்றால் சமத்துவமான சமுதாயத்தை, சமூக நீதியை இந்த நாட்டிலே நிலை நிறுத்த முடியாது. ஒருவரிடம் அனைத்து வசதிகளும் இருக்கும். மற்றொருவரிடம் சைக்கிள் வாங்கக் கூடிய அளவுக்கு கூட வசதி இருக்காது. அத்தகைய நபருக்கு கூடுதல் சலுகை மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த அரசினால் மட்டும் தான் முடியும். அதைத் தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்வரன்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திக்கேயன் மற்றும் ஏ.ஜே.மணிக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x