Published : 05 Sep 2022 07:43 PM
Last Updated : 05 Sep 2022 07:43 PM

சென்னை வங்கிக் கொள்ளை வழக்கு: காவல் ஆய்வாளர், நகைப் பட்டறை உரிமையாளர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

கோப்புப்படம்

சென்னை: தனியார் நகைக்கடன் வங்கிக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் நகை பட்டறை உரிமையாளர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் துணை நிறுவனமான நகைக்கடன் வழங்கும் ஃபெட் பேங்க் பினான்ஸ் சர்வீஸ் லிட்லில் அடமானம் வைத்த 481 நபர்களின் சுமார் 31கிலோ 700 கிராம் தங்க நகைகள் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 11 கோடி ரூபாய் என தெரிகிறது. இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அதே வங்கியில் மண்டல மேளாராக பணியாற்றிய முருகன் தனது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, சந்தோஷ், சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், பாலாஜி, செந்தில்குமார் மற்றும் அவரின் நண்பர் கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன், உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கொள்ளை போன நகைகளில் 3.5 கிலோ நகைகள் அவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. செந்தில்குமாரின் நண்பரான கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் கொள்ளை அடித்த நகையை உருக்க உதவி புரிந்துள்ளார்.

இந்நிலையில் ஆய்வாளர் அமல்ராஜ் , மற்றும் ஸ்ரீவத்சன் ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார். அதில் அமல்ராஜ் தாக்கல் செய்த மனுவில், "தான் ஒரு அப்பாவி எனவும் இந்த வழக்கில் காவல்துறை தன்னை தவறாக சேர்த்துள்ளதாகவும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை ஏற்க தயாராக உள்ளதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஸ்ரீவத்சன் தாக்கல் செய்த மனுவில் "கொள்ளை சம்மவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. கோவையில் இருந்த என்னை தவறாக காவல்துறை கைது செய்துள்ளது" என தெரிவித்திருந்தார்.

இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீவத்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத மனுதரார் கைது செய்யபட்டு சிறையில் உள்ளதாகவும் காவல் துறை கூறும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை " எனவும் வாதிட்டார்.

ஆய்வாளர் அமல்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என இல்லை என்றால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்" என கோரினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கொள்ளையடித்த நகைகளை மறைக்க இவர்கள் உதவியுள்ளனர். மேலும் ஸ்ரீவத்சன் நகையை உருக்க உதவி செய்துள்ளார். மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 9 மற்றும் 10-வது குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும். விசாரணை இன்னும் முடிவடையவில்லை, இன்னும் நகைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் வழங்க கூடாது" என எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x