Published : 05 Sep 2022 04:30 PM
Last Updated : 05 Sep 2022 04:30 PM
புதுச்சேரி: “போட்டி நிறைந்த உலகத்தில் இன்னொரு குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் நிலை உள்ளது. உலகில் இதைவிட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது” என்று ஆளுநர் தமிழிசை வேதனை தெரிவித்தார்.
புதுவை அரசு சார்பில் கருவடிகுப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் ஆசிரியர் திருநாள் விழா நடந்தது. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை முதல்வர் ரங்கசாமி பாராட்டி கவுரவித்தார். ஆளுநர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றியபோது பேசியது: ''என்னை போன்றவர்கள் இந்த மேடையில் நிற்க ஆசிரியர்கள்தான் காரணம். வீட்டில் எங்களுக்கு கிடைத்த அனுபவம், பயிற்சி மிக குறைவு. முழுமையாக ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
எனவே ஆசிரியர் சமுதாயத்துக்கு என்றுமே நன்றி சொல்ல தவறுவதில்லை. மாணவர்களின் மனதையும், ஆசிரியர்களின் மனதையும் நன்கு அறிவேன். இன்றைய மாணவர்களை கையாள்வது சிரமமான காரியம். பெற்றோர்கள் சிலரும், ஆசிரியர்களை குறைகூறி வந்தார்கள். 2 ஆண்டு கரோனா காலத்தில் குழந்தைகளை பெற்றோர் கவனித்தனர். கரோனாவுக்கு பின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ என வியந்து போயினர்.
மாணவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக, பல விஷயங்கள் தெரிந்தவர்களாக உள்ளனர். மருத்துவ மாநாடு, அரசியல் மாநாட்டில் பேசும்போதுகூட எனக்கு பயம் வராது. ஆனால் மாணவர்களிடையே பேசும்போது மட்டும் பயம் இருக்கும். குழந்தைகளை கையாள்வது மிகப்பெரும் கலை. அதற்கு மிகவும் பொறுமை வேண்டும். குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லித்தர வேண்டும். பள்ளி வரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கு வரவேண்டும் என்ற மனநிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். பள்ளி குழந்தைகள் தற்கொலை செய்வதை இந்த சமூகத்தில் யாரும் ஒத்துக்கொள்ள முடியாது. படிக்க முடியாமல் இறுதி முடிவை எடுக்கும் சூழ்நிலை எப்படி உருவாகிறது? அந்த சூழ்நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவரின் கடமை. பெண் குழந்தைகள் உடல்ரீதியாக, மனரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவர்களின் குரலை கூடுதலாக கேட்பது அவசியம்.
கடைசி பெஞ்ச் மாணவர்களை விட்டுவிடாமல் அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள். மாணவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளுங்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. கண்டிப்பதைவிட கண்காணிப்பது மிகவும் முக்கியம். போட்டி நிறைந்த உலகத்தில் இன்னொரு குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் நிலை உள்ளது. உலகில் இதைவிட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. மாணவர்களுக்கு கல்வியை போட்டியாக இல்லாமல், ஆசையாக படிக்கும் சூழ்நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்'' என்றுஅவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT