Published : 05 Sep 2022 09:32 AM
Last Updated : 05 Sep 2022 09:32 AM
தேசிய ஆசிரியர் தினம் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பாரம்பரிய மரபு. ஆசிரியர்கள் சமூகத்துக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். சுதந்திர இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் விரிவான எழுச்சிக் காலமாகும். இத்தருணத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மாணவர்களுக்கு கல்வியையும் பண்பையும் கற்பிக்கும் ஆசிரியர்கள், வருங்கால இந்தியாவை வல்லரசாக மாற்றும் விதமாக மாணவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்காக பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நம் நாட்டின் எதிர்கால இளைய தலைமுறையை சிறப்பானவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பு கொண்ட ஆசிரியர்களை அரசும், மக்களும் மதித்து போற்றுவதன் அடையாளமே ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்கள் மூலம் மேலும் திறன்பெற்று, சிறந்தவர்களாக விளங்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்குத் தரமானக் கல்வியை வழங்கவும், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கவும்தான் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,896 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்: ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மாணவர்களுக்குப் போதித்து, சிறந்த மனிதர்களாக உருவாக்கும் மகத்தானப் பணியாகும். அதற்குத் தியாக மனப்பான்மையுடன், அந்த தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களின் பணி மேன்மேலும் சிறக்க இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: விலைமதிப்பற்ற கல்வியை வழங்கும் ஆசிரியர்களின் நிலை இன்று சிறப்பானதாக இல்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். மேலும், நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வாழ்க்கைப் பாடத்தை கற்றுத்தந்து மாணவர்களை சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள்தான். மேலும், மாணவர்களை பட்டைத் தீட்டி வைரமாக ஒளிரச் செய்ய சிறந்த ஆசிரியரால்தான் முடியும். அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்த நன்னாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அறிவின் வளர்ச்சிக்கான கல்வியையும், வாழ்வில் உயர்வதற்கான வழிமுறைகளையும் போதிக்கும் ஆசானை நினைவுகூர்ந்து நன்றி சொல்லும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல, வி.கே.சசிகலா, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment