Published : 01 Jun 2014 11:33 AM
Last Updated : 01 Jun 2014 11:33 AM
தமிழகம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்கள் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் அம்மா உணவகம் எண்ணிக்கை 654 ஆக உயர்கிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து ஏழை, எளிய மக்கள் விடுபட்டு மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் 15 அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர், இந்த திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
தற்போது சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப் பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப் பதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்துவருகின்றன. மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உண வகங்களும், இதர மாநகராட்சி களில் தலா 10 அம்மா உணவகங் களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் தற்போது 294 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம் 200 அம்மா உணவகங்கள், ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப் பட்ட மதுரை, வேலூர், திருநெல் வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவ மனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள் உள்பட மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
இனி 654 உணவகங்கள்
ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 294 அம்மா உணவகங்களுடன் புதிதாகத் திறக்கவுள்ள 360-ஐயும் சேர்த்து, இனி மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் உள்ள அம்மா உணவகங்களை எகிப்து அதிகாரிகள் சமீபத்தில் பார்வை யிட்டனர். அங்கு சத்தான உணவுகள் சுத்தமாக, சுகாதாரமாக தயாரிக்கப்படுவது குறித்து அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த 2 அம்மா உணவகங்களுக்கும் விரைவில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கும் க்வெஸ்ட் நிறுவனம் கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT