Published : 27 Oct 2016 08:30 AM
Last Updated : 27 Oct 2016 08:30 AM
தமிழக கோயில்களில் திருடப் பட்ட சிலைகள் புதுச்சேரி வழியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கலைக்கூடம் என்ற பெயரில் சிலை கடத்தல் சந்தை சர்வதேச அளவில் நடை பெற்றுள்ளது.
தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்றதாக கைது செய்யப்பட்டவர் சிலை கடத்தல் மன்னன் தீனதயாள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை யில், இவர் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தீனதயாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த சிலை கலைக்கூடம் நடத்தி வரும் புஷ்பராஜன் என்பவருக்கும் சிலைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில், புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 5 நடராஜர் சிலைகள், மகிஷாசுரமர்த்தினி சிலை, சோமா ஸ்கந்தர் அம்மன் சிலை, சிவன்- பார்வதி திருமணக்கோல சிலை, சந்திரசேகரர் சிலை, அம்மன் சிலை கள் என 11 சிலைகள் கைப்பற்றப் பட்டன. அந்த வீட்டில் தங்கி இருந்த தச்சர் ரஞ்சித்குமார்(39) என்பவர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட சிலைகளை போலீஸார் நேற்று சென்னைக்கு கொண்டுசென்றனர்.
ராஜராஜ சோழன் கட்டியது
சிலை கடத்தல் பின்னணி தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தீனதயாள் வீட்டில் நடந்த சோதனையில் பச்சை நிற 2 சிவலிங்க கற்சிலைகள் மீட்கப்பட்டன. இவை, மேல்பாடி கிராமத்தில் இருக்கும் சோமநாத ஈஸ்வரன் கோயிலில் திருடப்பட் டவை என்று தெரியவந்தது.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஈஸ்வரன் கோயில் 1,047 ஆண்டுகள் பழமையானது. ராஜராஜ சோழன் இந்த சிவன் கோயிலுக்கு அருகில் தனது பாட்டனாருக்கும் ஒரு கோயில் கட்டியுள்ளார். இந்த 2 கோயில்களும் மிகவும் சிதிலமடைந்துவிட்டன. இந்த கோயில்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு 16 பழங்கால சிலைகள் திருடப்பட்டுள்ளன. 2 பச்சைக்கல் சிவலிங்கங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 சிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
வெளிநாட்டில் விற்பனை
விசாரணையில், தீனதயாளுக்கு சிலைகளை கடத்தி விற்பனை செய்த சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜன் என்பவர் புதுச்சேரியில் ஒரு வீட்டில் இந்த சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் அடிப்படையில் சோதனை நடந்தது.
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் எதிரே உள்ள வீட்டில் 3-வது மாடியில் 11 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 3 சிலைகளை பிரான்ஸில் வசிக்கும் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினர்.
உரிமையாளருக்கு உரியதா?
சிலைகள் கண்டெடுக்கப்பட்ட வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் கூறும்போது, “கொண்டா குடும்பத்தினரின் வாரிசுக்கு சொந்தமானது இவ்வீடு. இவர்களுக்கு, வொய்ட் டவுன் ஏரியாவில் வீடுகள், கலைப்பொருட்கள் விற்பனைக் கூடம் உள்ளது. இவ்வீட்டில் உள்ள சிலைகள் பிரெஞ்சு காலத்திலேயே வாங்கப்பட்டன. அது தொடர்பாக தொல்லியல் துறையில் பதிவு செய்தோம். புதுச்சேரி நீதிமன்றத்திலும் சிலை வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளோம். சிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்” என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கலைப் பொருட்கள் விற்பனைக் கூடம் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி சிலர், புதுச்சேரியில் கடத்தல் சிலைகளை விற்பனை செய்து வருகின்றனர். சுற்றுலாவுக்காக பல வெளிநாட்டவர்கள் இங்கு வந்து செல்வதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர். அதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.
புதுச்சேரி, ஆரோவில், கோட்டக்குப்பம் என பல இடங்களில் உள்ள கலைப் பொருட்கள் விற்பனைக் கூடங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் உட்பட வெளிநாடுகளுக்கு கலைப்பொருட்கள் என்ற பெயரில் கள்ளச்சந்தையில் சிலைகளை கடத்தும் குழு இயங்குவதை கண்டறியத் தொடங்கியுள்ளோம்” என்றனர்.
ரூ.31 கோடி நடராஜர் சிலை
நிருபர்களிடம் ஜஜி பொன் மாணிக்கவேல் கூறும்போது, “புதுச்சேரியில் 11 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மேல்பாடி கிராமத்தில் உள்ள சோமநாத ஈஸ்வரன் கோயிலுக்கு உரியவை என்று தெரிகிறது. இக்கோயில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. பெரிய நடராஜர் சிலையின் மதிப்பு ரூ.31 கோடிக்கு மேல் இருக்கும். மொத்த சிலைகளின் மதிப்பு ரூ.50 கோடி வரை இருக்கும். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT