Published : 21 Oct 2016 05:42 PM
Last Updated : 21 Oct 2016 05:42 PM
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இடைத் தேர்தலுக்கு புதிய பார்முலாவையே ஏற்படுத்திய திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு மிக அருகிலே இந்த சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது.
முருகனின் முதற்படை வீடான புகழ்பெற்ற ஆன்மிக தலமான திருப்ப ரங்குன்றம், மதுரை சர்வதேச விமானநிலையம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஐ.டி.பார்க் உள்ளிட்ட பெருமைப்படக்கூடிய விஷயங்கள் ஒரு புறம் இருந்தாலும் குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கான புதிய தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால் இந்த தொகுதியும், இங்கு வசிக்கும் மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர்.
மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையும், இந்த தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் வருவதாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆனால், அடிக்கல் நாட்டு விழாவோடு நிற்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம். பழநி கோயிலை போன்று அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு செல் வதற்கு மின் இழுவை ரயில், ரோப்கார் அமைக்கும் திட்டங்கள் நீண்ட காலமாக பேச்சளவிலேயே இருக்கிறது. திருப்பரங்குன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். திருவிழாக்கள், முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியில்லை.
குடிநீர் பிரச்சினை கடந்த 10 ஆண்டிற்கு மேலாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டிற்கு முன் திருப்பரங்குன்றம் மாநகரா ட்சியுடன் இணைக்கப்பட்டது. இதைதொடர்ந்து திருப்பரங்குன்றம் நகராட்சியாக இருந்தபோது கிடைத்த குறைந்தபட்ச வளர்ச்சி கூட மாநகராட்சியான பின் கிடைக்கவில்லை என உள்ளூர் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் 16 கால் சன்னதி தெரு வை சேர்ந்த ரமேஷ், (50) கூறுகை யில், திருப்பரங் குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரப் பிரச்சினை யாகிவிட்டது. பெரிய கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த தொகுதி மக்களின் பிரதான வேலைவாய்ப்பு கட்டிடத்தொழில், விவசாயம், விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாக இருக்கிறது. தற்போது மழையில்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் கட்டுமானப்பணிகள், அதனை சார்ந்த தொழில்கள் பாதித்து கட்டிடத்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
நிரந்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள், தொழிற் சாலைகள் இல்லை. அதனால் இங்குள்ள இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக திருப்பூர், கோவை மற்றும் கேரளாவுக்கு செல்லும் அவலம் உள்ளது. திருப்பரங்குன்றம் மேம்பாலம் அமைத்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வரை சர்வீஸ் ரோடு போடவில்லை. சரவண பொய்கை சுகாதாரமில்லாமல் பாழடைந் துவிட்டது, என்றார்.
கோயில் அடிவாரம் தெருவை சர்ந்த இந்திராணி கூறுகையில், 10 ஆண்டிற்கு முன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வந்தது. ஒரு மாதம் முன் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்தது. சமீப காலமாக தேர்தலுக்காக 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தருகின்றனர். லாரி தண்ணீரும் சரியாக வருவதில்லை. உப்பு தண்ணீரும் இல்லை. எல்லாவற்றுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கிதான் பயன்படுத்த வேண்டியதுள்ளது.
மாநகராட்சி, இந்து அறநிலையத்திற்கு இடையே இருக்கும் எல்லைப்பிரச்சினையால் கோயில் அடிவாரம் இருக்கும் வீடுகள் தனித்தீ்வு போல் உள்ளன. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பை அள்ள சரியாக வருவ தில்லை. குறைந்தபட்சம் குடிநீர் விநியோகம், சுகாதாரத்திற்காவது உத்தரவாதம் அளிக்க வேண்டும், என்றார்.
திருப்பரங்குன்றம் வாழை மண்டி வியாபாரி முனியாண்டி கூறுகையில், அரசின் இலவச திட்டங்கள், சாலை வசதிகள் ஓரளவு பரவா யில்லை. குடிநீர் மட்டுதான் பிரதான பிரச்சனையாக இருக்கிறது. பக்கத்தில் இருக்கிற ஆரியப்பட்டி, திருநகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வருகிறது. திருப்பரங்குன்றத்திற்கு அத்திட்டம் கொண்டுவரப்படவில்லை.
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை தூர்வாரி மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கினாலே குடிநீர் பிரச்சினை யை தீர்க்கலாம்.
அந்த கண்மாயை மீன் பிடிக்க குத்தகைக்குவிட்டு வருமானம் பார்க்கும் அதிகாரிகள், தூர்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது, என்றார்.
திருப்பரங்குன்றம் கீழ் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (45) கூறுகையில், திருப்பரங் குன்றம் மாநக ராட்சியுடன் இணைந்தபின் வீட்டு வரி முதல் எல்லா விலைவாசியும் உயர்ந்துவிட்டது. ஆனால், மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் தடம் மாறுகின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமே வாழ முடிகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT