Published : 05 Sep 2022 04:35 AM
Last Updated : 05 Sep 2022 04:35 AM
பேட்டைவாய்த்தலையில் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு காவலர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், மயானம் வரை அவரது உடலை சுமந்து சென்றார்.
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை வாலையூர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராமகிருஷ்ணன்(28). வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை வழக்கம்போல பணிக்குச் செல்வதற்காக, சீருடையுடன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்துக்குப் புறப்பட்டார்.
கே.ஆர் திருமண மண்டபம் அருகே சென்றபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அப்போது, அப்பகுதி வழியாக ரோந்து சென்ற போலீஸார், கீழே விழுந்து கிடந்த ராமகிருஷ்ணனை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், அவர் மாரடைப்பு காரணமாக இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்புவரை திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தரின் மெய்க்காப்பாளராக பணிபுரிந்தவர் என்பதால், அவர் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த டிஐஜி சரவணசுந்தர் உடனடியாக பேட்டைவாய்த்தலைக்குச் சென்றார். அங்கு, ராமகிருஷ்ணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், மயானம் வரை ராமகிருஷ்ணனின் உடலை சுமந்துச் சென்று, இறுதிச் சடங்குகளில் பங்கேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT