Published : 04 Sep 2022 07:04 PM
Last Updated : 04 Sep 2022 07:04 PM

3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மதுரை மாநகராட்சி நீச்சல் குளம்: பயனாளர்கள் ஏமாற்றம்

3 ஆண்டுகள் பூட்டியே கிடக்கம் மதுரை மாநகராட்சி நீச்சல் குளம்.

மதுரை: வாரவிடுமுறை நாட்களில் நீச்சல் கற்கவும், பொழுதுப்போக்காக நீச்சல் பயிற்சியும் பெற்று வந்த மதுரை நகர்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தற்போது மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் கடந்த 3 ஆண்டாக பூட்டியே கிடப்பதால் நீச்சல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் உள்ளனர்.

மதுரை காந்தி மியூசியம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் நீச்சல் கற்று வந்தனர். சாதாரண நாட்களிலும் காலை, மாலை நேரங்களிலும் பொழுதுப்போக்காகவும் நீச்சல் பயிற்சி பெற அதிகமானோர் வந்தனர். அதற்காக நீச்சல் குளத்தில் சிப்ட் முறையில் நீச்சல் பயிற்சியாளர்களும், பராமரிப்பாளர்களும் பணிபுரிந்தனர்.

மதுரை மாநகரில் மழையே பெய்யாமல் வைகை ஆறு முதல் கண்மாய்கள் அனைத்து வறண்டு கிடந்தாலும் இந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பி பராமரிக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இந்த நீச்சல் குளம் நீச்சல் கற்கவும், பயிற்சி பெறவும் வசதியாக இருந்தது.

இந்த மாநகராட்சி நீச்சல் குளம் பராமரிப்பு 3 அல்லது 2 ஆண்டிற்கு ஒரு முறை தனியாருக்கு டெண்டர் விடுவது வழக்கமாக இருந்தது. கரோனா தொற்று பரவலுக்கு முன் இந்த மாநகராட்சி குளம் டெண்டர் நிறைவு பெற்றது. அதன்பிறகு கரோனா தொற்றால் மாநகராட்சி நிர்வாகம் நீச்சல் குளத்தை டெண்டர் விடாமல் வைத்திருந்தது.

அதன்பிறகு சமீபத்தில் மாநகராட்சி குளம் நீச்சல் குளத்தை டெண்டர் விடுவதற்கு ஏற்பாடு நடந்தது. அதைதொடர்ந்து நீச்சல் குளம் புதுப்பிக்கும் பணி கடந்த 3 மாதத்திற்கு முன் தொடங்கியது. கடந்த காலத்தில் நீச்சல் குளத்தின் ஆழம் அதிகமாக இருந்ததால் நீச்சல் கற்க வருவோர் அடிக்கடி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதனால், நீச்சல் குளம் குழம் 12 அடியில் இருந்து 6 அடியாக குறைத்து பராமரிப்பு பணி நடந்தது.

சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தை பராமரிப்பவர்களே இந்த நீச்சல் குளத்தை டெண்டர் எடுத்து பராமரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சமீப காலமாக பராமரிப்புப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் எதுவுக்காததால் நிரந்தரமாக மூடியே கிடக்கிறது. கரோனா தொற்று முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியப்பிறகும் இந்த நீச்சல் குளத்தை கடந்த 3 ஆண்டாக மாநகராட்சி நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை.

பொதுமக்கள் கூறியதாவது: ''மாநகராட்சி குளம் பயன்பாட்டில் இருந்தபோது பள்ளி குழந்தைகள் எளிதாக நீச்சல் கற்று வந்தனர். கிராமங்களை போல் கண்மாய், குளங்கள் மதுரை நகர்பகுதியில் குழந்தைகள் நீச்சல் கற்பதில்லை. இதுபோல் பாதுகாப்பான நீச்சல் குளத்தில்தான் கற்க முடியும். தற்போது அதுவே மூடியே கிடப்பதால் குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்ளாமலே வளருகின்றனர்.

எப்படி சைக்ளிங் கற்று கொள்வது பிற்காலத்தில் பைக், கார் ஒட்டுவதற்கு ஒரு உதவியாக இருக்குமோ அதுபோல் நீச்சல் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் நீர்நிலைகளில் தவறி விழுந்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது,'' என்றனர். மாநகராட்சி முதன்மை பொறியாளர் லட்சுமணன் கூறுகையில், ''டெண்டர் விடப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. பணிகளை விரைப்படுத்தி மாநகராட்சி நீச்சல் குளத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x