Published : 04 Sep 2022 05:58 PM
Last Updated : 04 Sep 2022 05:58 PM
திருப்பூர்: பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில் முறைகேடாக இயங்கி வரும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அதேபகுதியில் உள்ள தனது தோட்டத்தில் 6-வது நாளாக விவசாயி விஜயகுமார்(45) உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ''திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில், தனியார் கல்குவாரி மற்றும் ஜல்லி ஆலை இயங்கி வருகிறது. அரசின் நிபந்தனைகளை மீறி பாறையை அதிக வெடி மருந்து வைத்து தகர்ப்பது, அதிக ஆழத்துக்கு தோண்டுவது என செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கனிம வளத்தை விதிமுறைக்கு புறம்பாக விற்பனை செய்துள்ளது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓடையை மறைத்து குவாரி ஏற்படுத்தியது, மின் பாதையிலிருந்து 50 மீட்டர் தள்ளி குவாரிப் பணி செய்யும் விதியை கடைபிடிக்காமல், மின் பாதையை ஒட்டிய குவாரி பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் கற்களை வெட்டியது, கிராமத்தில் உள்ள குவாரியைச் சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், நிபந்தனையை மீறி எம் சாண்ட் கழிவுகள் மலை போல் கொட்டியது.
இதனால் காற்று மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய இயலாமல், காற்று, நீர், மண் மாசு ஏற்பட்டு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது தொடர்பாகவும், கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை விட, மிக அதிக ஆழத்தில் குவாரி பணிகள் செய்யப்பட்டுள்ளதால் கிணறு, ஆழ் குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் குவாரிக்கு வடிந்து விடுவதால் விவசாயம் செய்ய இயலவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத் துறை, காவல்துறை, வட்டாட்சியர், நீர்வள ஆதாரத் துறை, வெடி மருந்து துறை ஆகியோர் மாதம் தோறும் குவாரியை நிபந்தனைப்படி ஆய்வு செய்ய வேண்டும். சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததை மறைப்பதற்காக கடந்த மூன்று நாட்களில், நூற்றுக்கணக்கான லாரிகளில் எம். சாண்ட் கழிவுகளை குவாரிகளில் கொட்டி வருகின்றனர்.
குவாரியைச் சுற்றிலும் அடிப்படை நிபந்தனையான வேலி கூட அமைக்கப்படவில்லை. முறைகேடுகளுடன் இயங்கி வரும் தனியார் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கல்குவாரி உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆக. 30-ம் தேதி தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தனது நிலத்தில், தொடங்கியுள்ளார். நேற்று 6-வது நாளாக தொடர்ந்தார். உடல் சோர்வுற்ற நிலையில், இவருடைய போராட்டத்திற்கு மனித உரிமை அமைப்புகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT