Published : 04 Sep 2022 05:51 PM
Last Updated : 04 Sep 2022 05:51 PM
மதுரை: தமிழகத்தில் செயல்படும் பழமையான பல்கலைக் கழகங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழமும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு 160-க்கும் மேற்பட்ட உதவி, இணை, பேராசிரியர்களும், 280-க்கும் மேற்பட்ட அலுவலர்களும், 300 தற்காலிக பணியாளர்கள், தொலை நிலைக் கல்வியில் 300க்கும் மேற்பட்டோரும் பணிபுகின்றனர். இவர்கள் தவிர, சுமார் 400க்கும் மேற்பட்ட ஓய்வூதிகள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க சுமார் ரூ.10.5 கோடி தேவை என, பல்கலை நிர்வாகம் கூறுகிறது. மேலும், பல்கலைக்கழகத்துக்கான அடிப்படை வசதிக்கான தேவைகளும் இருக்கின்றன.
இந்நிலையில் சில மாதமாகவே இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து நிதி நெருக்கடி சந்திக்கிறது. ஏற்கெனவே 136 ஒப்பந்த பணியாளர்களும் நிதி நிலைமையை காரணம் காட்டி வெளியேற்றப்பட்டனர். ஆனாலும், போதிய நிதி வருவாயின்றி ஒவ்வொரு மாதமும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழலில் நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. பல்கலைக்கழகத்திற்கான வருவாயை பெருக்க, துணைவேந்தர் ஜெ.குமார் சில நடவடிக்கை எடுத்தாலும், அது கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு மாதமும் 31-ம் தேதி அல்லது 1-ம்தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும்.
நிதி நெருக்கடியால் கடந்த 2 மாதமாகவே குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆகஸ்டு மாதத்திற்கான சம்பளம் இன்று வரை கிடைக்காததால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என, பேராசிரியர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ”ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓயவூதியத்திற்கென சுமார் ரூ.10 கோடிக்கு மேல் தேவை. கடந்த ஜூலை மாதத்திற்கான சம்பளம் தாமதமாகவே கிடைத்தது. ஆகஸ்டுக்கான சம்பளம், ஓய்வூதியம் செப்., 3 ந்தேதி கடந்தும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டு கடன், கார், பிள்ளைக்களுக்கான கல்விக்கடன் மாத தவணை மாத துவக்கத்தில் 1 அல்லது 2 ம் தேதிகளில் செலுத்த வேண்டியுள்ளது. செலுத்தவில்லை என்றால் அபராத தொகை கட்டவேண்டும். இதர குடும்ப செல்விற்கும் சம்பளத்தை நம்பியே உள்ளோம்.
ஆகஸ்டு மாத சம்பளத்திற்கு 75 சதவீத தொகை இருந்தும், எஞ்சிய தொகைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் திணறுகிறது. துணைவேந்தரும் முயற்சி எடுக்கிறார். இருப்பினும், சம்பளம் தாமதமாகிறது. இன்னொரு முயற்சி நடப்பதாக அறிகிறோம். அதாவது, இன்னும் ஓரிரு நாளில் மதுரை திருமண விழாவிற்கு வரும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நேரில் சந்தித்து, பல்கலை நிதி நிலமை, ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவதில் நிலவும் சிக்கல் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாமே என, பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும், அதுவரை சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எதுவானலும், பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரமான வருவாயை பெருக்க, நிர்வாகம் தமிழக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்றனர்.
நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ‘‘ நிதி நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும்,சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடு முறையால் தாமதம் ஏற்ப்படிருக்கலாம் . ஓரிரு நாளில் வழங்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT