Published : 04 Sep 2022 01:00 PM
Last Updated : 04 Sep 2022 01:00 PM

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான, மகிழ்ச்சியான வரலாற்றில் பதிவாகி இருக்கக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமாக நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்பது மட்டுமல்ல, நாங்களும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பயன்பாட்டுக்காகச் சென்னை பழைய சட்டக்கல்லூரிக் கட்டடத்தைப் புதுப்பித்தல் மற்றும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நான் பெருமையும் அடைந்து கொண்டிருக்கிறேன். இந்த வளாகத்துக்குள் வரும்போது, ஏன், இங்கே நின்று கொண்டு இருக்கும்போதும், மிகப்பெரிய கம்பீரத்தையும், உணர்ச்சியையும் நான் அடைந்து கொண்டிருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்னவென்றால், 1862-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் நிறுவப்பட்டது இந்த உயர்நீதிமன்றம். அந்த வகையில் பார்த்தால், இது 160-ஆவது ஆண்டு. 160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பாய் ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே வாய்த்த பெருமை.

நீதி கம்பீரமாக நிலைநாட்டப்படுவதைப் போலவே, இந்த கட்டடமும் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. இந்தோ - சார்சனிக் முறைப்படி கட்டப்பட்ட இந்தக் கட்டடம், முதல் உலகப் போரின் போது எம்டன் போர்க்கப்பலால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்றைக்கும் கூட அதன் நினைவாக பாரிமுனையில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. செஞ்சிவப்பு வண்ணமும், கட்டடத்தின் கூரைகளில் வண்ணக் கண்ணாடிகளும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 175 அடி உயரத்தில் கலங்கரை விளக்கு முன்பு செயல்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நீதித்துறைக்கே அடையாளமாகச் சுட்டிக்காட்டிச் சொல்லக் கூடிய அளவுக்கு, அழகிய தோற்றத்தோடு, நமது உயர்நீதிமன்றக் கட்டடம் இருந்து வருகிறது.

இதே அழகும், கலைநயமும், கம்பீரமும் கொண்டதாகப் புதிய கட்டடம் அமைய வேண்டும் என்று நம்முடைய தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சரை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கம்பீரமான சென்னை உயர்நீதிமன்றக் கட்டடத்துடன், இதற்கு முன்பு சட்டக்கல்லூரி இருந்த வளாகமும் இணைக்கப்படுகிறது. உயர்நீதிமன்றக் கட்டடத்தைப் போலவே சட்டக் கல்லூரிக் கட்டடமும் கம்பீரமானதுதான்.

1891-ஆம் ஆண்டு சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. மெட்ராஸ் சட்டக்கல்லூரி என்று அதற்கு அப்போது பெயர். இந்தியாவுக்கான சட்டத்தை உருவாக்கிக் கொடுத்த மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவாக டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி என்று அதற்குப் பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர். அந்த வளாகத்தையும், அதன் பழமை மாறாமல் மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

பாரம்பரியமான கட்டடங்களைப் பாதுகாப்பது என்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பது. அதில் நமது அரசு மிக கவனமாக உள்ளது. பாரம்பரியமான கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு பழமை கொண்ட கோயில்கள், சென்னை கோட்டையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தேவாலயங்கள், தர்காக்கள், அரசு அருங்காட்சியகம், அமீர் மகால், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக கட்டடம், காவல்துறை அருங்காட்சியகம், அரசு கவின்கலைக் கல்லூரி, ஆவணக் காப்பகம், ரிப்பன் கட்டடம், தெற்கு ரயில்வே தலைமையகம், இப்படி எத்தனையோ கட்டடங்கள் சென்னையின் பாரம்பரியக் கட்டடமாக அமைந்திருக்கிறது. இவை பழமையான நமது பண்பாட்டுச் சின்னங்கள். இவற்றின் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் பழைய சென்னை சட்டக்கல்லூரி வளாகமும் பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்.

நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்டவை! அதற்கான சான்றுகள் தமிழிலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. வள்ளுவரும், இளங்கோவடிகளும், புறநானூற்றுப் புலவர்கள் பலரும், நீதியின் மேண்மையைப் பற்றியும், செங்கோல் வழுவாமையின் சிறப்பினைப் பற்றியும், எப்போதும் உயர்த்திப் பிடித்துள்ளார்கள். அத்தகைய ஒரு திராவிட மரபுவழி வந்த நம் பண்பாட்டில் வளர்ந்த இந்த அரசு, அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து, மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

சென்னையில் ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து செயல்பட வைக்க வேண்டும், அதுதான் சிறப்பானதாக இருக்கும். நீதித்துறையினர் நினைத்து அரசுக்குப் பரிந்துரை செய்ததும், உடனே அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஒப்புதலை வழங்கினோம். இதன் மூலமாக சென்னையில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் இருந்து செயல்படப் போகின்றன. இது பொதுமக்களுக்கு ஏற்பட்ட வசதி மட்டுமல்ல, வழக்கறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய வசதிதான். அலைச்சல் தவிர்த்து, அமைதியாகப் பணியாற்ற இது வழிவகுக்கும்.

> உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு சேமநல நிதியானது 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நான் அறிவித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 23 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் நான் பங்கேற்றேன். அந்த விழாவில் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

> நீதித்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளுக்காக பல்வேறு நீதிமன்றங்கள் அமைக்கும் வகையில் 4.24 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது என்பதை நான் குறிப்பிட்டேன்.

> 9 அடுக்கு கட்டடம் கட்ட 315 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற மே மாதம் 2021 முதல், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 6 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 35 புதிய நீதிமன்றங்கள், 54 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

புதியதாக நீதிமன்ற கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்பு கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 268.97 கோடி ரூபாய் ஒப்பளிப்பு தந்திருக்கிறது.
கீழமை நீதிமன்றங்களுக்கு (Subordinate Courts) பல்வேறு நிலையிலான 155 பணியாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு கணினி மற்றும் கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு (Computer and IT related infrastructure) மொத்தம் ரூபாய் 11.63 கோடி ஒப்பளித்துள்ளது.

நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும் என்றும் நான் உறுதி அளிக்கிறேன். அப்போது நடந்த அந்த விழாவிற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மாண்பமை ரமணா அவர்கள் வருகை தந்திருந்தார்கள். நீதித்துறைக்குத் தமிழ்நாடு அரசு செய்து வரக்கூடியத் திட்டங்களை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். அவர் அருகில்தான் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த விழாவில் பேசும்போது, வெளிப்படையாகப் பாராட்டினார்.

''பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் இருக்கிறது" என்றும் மாண்புமிகு தலைமை நீதிபதி ரமணா அவர்களே அன்றைக்குப் பாராட்டினார்.

பொதுவாக, நீதியரசர்கள் வெளிப்படையாகப் பாராட்டமாட்டார்கள் என்பதை நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள். அதையும் மீறி பாராட்டினார்கள். அதன் மூலம் தமிழக அரசு நீதித்துறை மீது எத்தகைய அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

சில கோரிக்கைகளை, தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வருகை புரிந்திருக்கும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

முதலாவதாக தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கவேண்டும்.

இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்துகொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமையவேண்டும்.

மூன்றாவதாக, நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் நியமனங்கள் அமைய வேண்டும்.

இவற்றை இங்கு வருகை புரிந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் மாண்மிகு நீதியரசர்கள் கனிவுடன் அவர்கள் இதை பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

எனது தலைமையிலான அரசானது சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். நீதித்துறையின் ஒரு தீர்ப்பு அல்ல, ஒற்றைச் சொல்லையும் மதிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் நல்வாழ்வுக்கு அரசும், மக்களுக்காக, நீதிக்காக நீங்களும் பணியாற்றி வருகிறீர்கள். நல்வாழ்வுடன் இணைந்ததுதான் நீதி. எனவே நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும், தமிழ்நாடு அரசு எப்போதும் செய்யும் என்ற உறுதியை மீண்டும், மீண்டும் உங்களிடத்தில் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, விடைபெறுகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x