Published : 04 Sep 2022 10:49 AM
Last Updated : 04 Sep 2022 10:49 AM
திருச்சியைச் சேர்ந்த வீடியோ கேமராமேன் பாலகிருஷ்ணன், லைட்மேன் சத்தியமூர்த்தி, புகைப்படக்காரர் அகஸ்டின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிள் மண்ணில் சறுக்கி சாலையோர மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர். 3 பேரின் குடும்பத்தினரும் திருச்சி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.4.50 லட்சம், சத்தியமூர்த்தி குடும்பத்துக்கு ரூ.3.60 லட்சம், அகஸ்டின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி நேஷனல் காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.தாரணி பிறப்பித்த உத்தரவு:
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாலகிருஷ்ணன் தனக்கு பின்னால் இருவர் பயணம் செய்ய அனுமதித்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமானது இல்லை.
அவரது சகோதரருக்கு சொந்தமானது. இதனால் பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கான இழப்பீடு ரத்து செய்யப்படுகிறது. ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்து நிகழ்ந்ததில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த இருவருக்கும் 50 சதவீத பொறுப்பு உள்ளது.
இதனால் அவர்களின் இழப்பீட்டுத் தொகை 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதன்படி சத்தியமூர்த்தி குடும்பத்துக்கான இழப்பீடு ரூ.1.80 லட்சமாகவும், அகஸ்டின் குடும்பத்துக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாகவும் குறைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT