Published : 04 Sep 2022 07:28 AM
Last Updated : 04 Sep 2022 07:28 AM

அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை கொண்டுசெல்ல உதவுகிறது உயிர்களை காக்கும் விரைவு நெடுஞ்சாலை - நிதின் கட்கரி பெருமிதம்

சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை கொண்டு செல்வதற்கான ‘ட்ரோன்’ தொழில்நுட்ப வசதியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். உடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை தலைவர்எம்.கே.ராஜகோபாலன், இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பாலகிருஷ்ணன். படம்: பு.க.பிரவீன்

சென்னை: அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை நகரங்கள், மாநிலங்கள் இடையே கொண்டு செல்ல விரைவு நெடுஞ்சாலைகள் உதவிகரமாக இருக்கின்றன. இதனால், பல உயிர்களை காக்கின்றன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைந்து கொண்டுசெல்ல பிரத்யேக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொலி வாயிலாக கலந்துகொண்டு, ட்ரோன் தொழில்நுட்ப வசதியை தொடங்கி வைத்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை தலைவர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 30 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட இதயம், நுரையீரல் அறுவை சிகிச்சைகள் செய்த மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டார். இதில் அமைச்சர்கள் பேசியதாவது:

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி: நகரங்கள் முதல் கிராமங்கள் வரை உலகத் தர மருத்துவ சிகிச்சையை கொண்டு செல்வதன் மூலம் இந்தியா சுகாதாரத் துறையில் அடுத்த மைல்கல்லை எட்டும். உடல் உறுப்புகளை தானமாக பெற்ற பிறகு, அவற்றை மற்றொரு இடத்துக்கு விரைந்து எடுத்துச் செல்வது மிகவும் சவாலானது. அதில் சில குறைகள் இருந்தாலும், போக்குவரத்து இணைப்பு சிறப்பாக இருந்தால், அவற்றை சரிசெய்துவிடலாம்.

இந்தியாவில் சாலை போக்குவரத்து கட்டமைப்பு சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. மாநிலங்கள், நகரங்கள் இடையே உறுப்புகளை கொண்டு செல்ல விரைவு நெடுஞ்சாலைகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இதன்மூலம் பல உயிர்களை காக்கின்றன. சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு உறுப்புகளை கொண்டுசெல்லவும், சிலநேரம், ஆந்திராவுக்கு கொண்டு செல்லவும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை உதவிகரமாக உள்ளது. தற்போது ட்ரோன் மூலம் உறுப்புகளை கொண்டு செல்ல முடிவு செய்திருப்பது புதுமையான யோசனை. இது மகிழ்ச்சியை தருகிறது. வெளிநாடுகளில் இருந்து பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர். உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ரூ.7,730 கோடி ஒதுக்கீடு

தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன்: முதல்வர் காப்பீடு திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, ரூ.7,730 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அனைத்துமாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. வருங்காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா பரவலின்போது இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறைந்திருந்தது. அதேநேரம், எம்ஜிஎம் போன்ற மருத்துவமனைகள் ஏர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டன.

இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில், தமிழக அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனைகள் செயலாற்ற வேண்டும். அப்போது, ஏழை, எளியோருக்கும் அவர்களது சிறப்பான சேவை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x