Published : 04 Sep 2022 07:45 AM
Last Updated : 04 Sep 2022 07:45 AM
சென்னை: கல்வி உதவித் தொகைக்கான யசஸ்வி நுழைவுத் தேர்வை மாநில மொழிகளிலும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி கோரியுள்ளார்.
மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ‘பிஎம் யசஸ்வி’ (PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India - YASASVI) எனும் கல்வி உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 9, 11-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சீர்மரபினர் பிரிவு மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான நுழைவுத் தேர்வு செப்.11-ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நாளை (செப்.5) வரை நீட்டிக்கப்பட்டதால் தேர்வு செப்.25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கணினி வழியில் 3 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கிலம், இந்தியில் மட்டுமே யசஸ்வி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியை மறைமுகமாக திணிக்கும் இந்த பாரபட்சமான முறையை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இத்தேர்வை நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT