Published : 27 Oct 2016 09:29 AM
Last Updated : 27 Oct 2016 09:29 AM

உள்ளாட்சி 25: நாட்டையே திரும்பிப் பார்க்க செய்த எளிய பெண்மணிகள்!

பெண்கள், பட்டியல் இனத்தவருக்கு இரண்டு முறை இடஒதுக்கீடு...

ஜெயலலிதா அரசு உத்தரவின் பின்னணி இதோ...



நாட்டில் எந்த மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்பிலும் இல்லாத சிறப்பு தமிழகத்தில் இருக்கிறது. என்ன தெரியுமா? பெண்கள் மற்றும் பட்டியல் வகுப் பினருக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படும் இட ஒதுக்கீடு இரண்டுமுறை நீடிக்கும். அதாவது, பத்து ஆண்டுகள் நீடிக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் மாறலாம். ஆனால், பெண்கள் மற்றும் பட்டியல் வகுப்பினர் வசமே பதவி நீடிக்கும். பெண்களுக்கும் பட்டியல் வகுப்பினருக்கும் இந்தச் சலுகையைக் கொடுத்த வகையில் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது தமிழகம். காரணம் யார் தெரியுமா? மிக எளியப் பெண்மணிகள்! இதுமட்டுமா? இன்னும் இருக்கிறது வாருங்கள்.

பொன்னி கைலாசம், மைக்கேல்பட்டினம் ஜேசுமேரி, மலர்விழி மணிமாறன், ராணி சாத்தப்பன், வெங்கடேஸ்வரி உள்ளிட்டவர் களே அந்த எளியப் பெண்மணிகள். 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள். கிராமத்துப் பெண் மணிகள். பெரிய படிப்பு இல்லாதவர்கள். அதுவரை தங்கள் கிராமத்தைத் தாண்டி யிராதவர்கள். இன்றைக்கே உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான பெண்கள் பொம்மைகளாகத்தான் இருக்கிறார்கள். பலருக்கு தாங்கள் பஞ்சாயத்துத் தலை வர் என்பது கோப்புகளில் கையெழுத்துப் போடும்போது மட்டுமே நினைவுக்கு வரும். பலருக்கு வெளியே தலைகாட்டவே அனுமதியில்லை. அடுப்பங்கரையில் அடைக் கப்பட்ட ஜனநாயகம் அது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும்? ஆனால், அத்தனை தடைகளையும் தகர்ந் தெறிந்தார்கள் இந்தப் பெண்மணிகள்.

தமிழ்நாடு பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு என்பது இவர்கள் உருவாக்கிய அமைப்பு. பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது அது. இதன் தலைவர் பொன்னி கைலாசம்.

“நாங்க பொறுப்புக்கு வந்ததும்தான் எங்களுக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது. எங்களை யாரும் இங்கே விரும்பி கொண்டுவரலை. வேற வழியில்லாம அமர்த்தியிருக்காங்க. குடும்பச் சூழ்நிலை, அதிகாரிகள் அலைக்கழிப்பு, அரசி யல்வாதிகள் தலையீடுன்னு எங்களுக்கு கண்ணைக் கட்டி காட்டுலவிட்டது மாதிரி இருந்துச்சு. பொம்பளைதானேன்னு இளக் காரம். எல்லாம் சமாளிச்சு, நெளிவு சுளிவு களைத் தெரிஞ்சிக்கவே மூணு வருஷம் ஓடிப்போயிடுது. அப்புறம் எங்கே நிர்வாகம் பண்றது? மக்களுக்கு வேலை செய்யறது?

நெகிழ்ந்த ஜெயலலிதா!

இதனால் பெண்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை இடஒதுக்கீடு வேண்டும்னு கோரிக்கை வைச்சோம். தலைவர்கள் பலரையும் பார்த் தோம். ‘ஒருதடவை கொடுக்குறதே பெரிய விஷயம்’ அப்படிங்கிற மாதிரி எல்லோரும் பேசினாங்க. அப்ப எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவைப் போய் பார்த்தோம். எங்களை உட்காரவெச்சு பொறுமையாக கேட்டார். ‘நீங்க சொல்றதை ஒரு பெண்ணாக என்னால் புரிஞ்சிக்க முடியுது. நான் கடந்து வந்த பாதைதானே அதுவும்...’னு ரொம்ப நெகிழ்ச்சியாக பேசினார். ஒரு கேள்வி கேட்டார். ‘இரண்டாம் முறையும் பெண்களுக்கே ஒதுக்கும்போது மறுபடியும் நீங்க வராம போனால் என்ன செய்வீங்க?’ன்னார். ‘நாங்க வராமல் போனாலும் இன்னொரு பெண்தானே வருவாங்க மேடம். நாங்க அவங்களுக்கு வழிகாட்டியாக இருப்போம்’னு சொன்னோம். ரசிச்சு சிரிச்சவர், வரும் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்னு சொன்னார்.

சொன்னபடியே 2001-ம் வருஷம் ஜெய லலிதா முதலமைச்சர் ஆனாங்க. எங்க மனுவை சட்டப் பிரிவுக்கு அனுப்பி ‘சட்டச் சிக்கல் இருக்கிறதா?’ என்று கேட்டாங்க. அரசியல் சாசன சட்டத்தை ஆய்வுசெய்த அதிகாரிகள், ‘அரசியல் சாசனச் சட்டம் 73-வது பிரிவில் எந்த இடத்திலும் இட ஒதுக்கீட்டை எப்போது சுழற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அதனால் பெண்களுக்கு இருமுறை இடஒதுக்கீடு தரலாம்’னு சொன் னாங்க. உடனடியாக எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு மட்டும் இல்லை; கூடவே பட்டியல் இனத்தவருக்கும் தொடர்ந்து இருமுறை இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது” என்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு அது. இதோ இந்த முறை 50 சதவீதம் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பஞ்சாயத்துக்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பெண்களே கோலோச்ச வழிசெய்கிறது இந்தப் பெண்களின் உழைப்பு.

இன்னொரு விஷயம். அந்தக் கால கட்டத்தில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியரை சந்திப்பதில் அநேக இடையூறுகள் இருந்தன. நேரம் கேட்டு பல நாட்கள் காத்துக்கிடந்தார்கள். பல சமயம் சந்திப்பு மறுக்கப்பட்டது. இதையும் அரசு கவனத்துக்கு கொண்டுச் சென்றார்கள். உடனடியாக அரசாணை போடப்பட்டது. பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் நிர்வாகம் தொடர்பாக ஆட்சியர்களை சந்திக்க வந்தால் மாவட்ட ஆட்சியர்கள் துறை அதிகாரிகளை வரவழைத்து தனியாக கூட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னது அந்த அரசாணை.

பிரதமரிடம் நியாயம் கேட்ட பெண்மணிகள்!

இன்னும் இருக்கிறது... உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு கணிசமான அளவு நிதியை ஒதுக்கு கிறது. இந்த நிதி நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவதில்லை. மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறைக்கு செல்லும் நிதியை மாநில அரசு அதிகாரிகள் உள்ளாட்சி களுக்கு அனுப்புவார்கள். மாநில அரசின் நிதி நிலையைப் பொறுத்து பல சமயங்க ளில் இந்த நிதி வேறு துறைகளுக்கு மடைமாற் றப்பட்டது. மாதக்கணக்கில், ஆண்டுக்கணக் கில் அதிகாரிகள் நிதியை அனுப்பாமல் இழுத்த டித்தனர். அதாவது, மாநில அரசு பார்த்து போனால் போகட்டும் என்று கொடுக்கும் நிலை இருந்தது. கிராமப் பஞ்சாயத்துக்களின் வளர்ச்சிக்கு இது பெரும் தடையாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஒருமுறை சென்னை வந்தார். கடும் முயற்சிகளுக்குப் பிறகு எப்படியோ இந்தப் பெண்கள் பிரதமரை சந்தித்து விட்டார்கள். மேற்கண்ட பிரச்சினை குறித்து தயாராக ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த மனுவை அவரிடம் கொடுத்தார்கள். மனுவைப் படித்த மன்மோகன் சிங், ‘நியாயமான கோரிக் கைதானே, இப்படி எல்லாம் கூடவா நடக்கிறது?’ என்று கேட்டுவிட்டு மனுவை அன்றைய மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யரிடம் அனுப்பினார். உள்ளாட்சிகள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தவர் மணிசங்கர் அய்யர். உள்ளாட்சிகளின் அதிகார பரவலுக்காக அவர் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம்.

இந்தப் பெண்களின் மனுவை திட்டக் குழுவுக்கு அனுப்பிய மணிசங்கர் அய்யர், உடனடியாக அனைத்து மாநிலங்களின் உள்ளாட்சித் துறை அமைச்சர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலர்களையும் அழைத்து கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு இந்தப் பெண்மணிகளும் அழைக்கப்பட்டார்கள். அனைத்து மாநிலச் செயலர்களிடம் மணி சங்கர் அய்யர் இதுகுறித்து விசாரித்தார். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனாலும் அவர், ‘உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை மாநில அரசுகள் காலதாமதம் செய்வது முறை அல்ல; அது சட்டப்படி தவறும் கூட. இனிமேல் அவ்வாறு காலதாமதம் செய்தால் என்ன செய்யலாம்?” என்று கூடியிருந்த அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் பார்த்து கேட்டார். பதில் எதுவும் வரவில்லை. அமைதி நிலவியது. சட்டென்று எழுந்தார்கள் இந்தப் பெண்கள். “வட்டி போட்டு கொடுக்கச் சொல்லுங்க சார்...” என்றார்கள். உடனே பறந்தது நாடு முழுவதும் உத்தரவு.

‘உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு அனுப்பும் நிதியை மாநில அரசுகள் வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. மேலும் அந்த நிதியை 15 நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் அதற்கு வட்டி போட்டு கொடுக்க வேண்டும்’ என்று அரசாணை வெளியிட்டது மத்திய அரசு. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த அரசாணை இது. இன்றைக்கு மத்திய அரசின் கணிசமான நிதி நாடு முழுவதும் உள்ள கிராமங்களைச் சென்றடைகின்றன. சாலைகள், கழிப்பறைகள், குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அடித்தட்டு மக்கள் ஒரளவு நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் இந்த எளிய பெண்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்கள் இவர்கள். நாம் மறக்கக் கூடாத பெண்களும்கூட!

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x