Published : 03 Sep 2022 07:39 AM
Last Updated : 03 Sep 2022 07:39 AM
சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கலைஞர் விருதுக்கு கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாபிறந்தநாள், 16-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாள், 17-ம் தேதிபெரியார் பிறந்தநாள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, திமுக முன்னோடிகள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முப்பெரும் விழா,விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற உள்ளது. இதற்கான பிரம்மாண்ட மேடை, விழா பந்தல்கள் அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், இந்த ஆண்டு முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருது, கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது,திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது, புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கலைஞர் விருது பெறவுள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, துணை பொதுச் செயலாளரான அமைச்சர் பொன்முடி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT