Last Updated : 19 Oct, 2016 12:03 PM

 

Published : 19 Oct 2016 12:03 PM
Last Updated : 19 Oct 2016 12:03 PM

சாத்தூர் கொலை வழக்கில் 6 பேருக்கு நீதிமன்றக் காவல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பஸ்ஸில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி என்பவரது இளைய மகன் கருப்பசாமி (24). திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

கோவையில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கருப்பசாமி, தசரா விடுமுறைக்காக கோவில்பட்டி வந்தார்.

விடுமுறை முடிந்து, கடந்த 12-ம் தேதி கோவை செல்ல பஸ்ஸில் பயணித்தார். சாத்தூர் படந்தால் அருகே வந்தபோது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கருப்பசாமி இறந்தார்.

இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான முகமது ரபீக் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டார். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக யாஸ்மின் பானு, லதா, மகாலட்சுமி, பாக்கியராஜ், வாசமுத்து ஆகியோரையும் 18 வயது சிறுவன் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் இன்று (புதன்கிழமை) சாத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி கீதா முன்னிலையில் போலீஸார் ஆஜர் படுத்தினர். அப்போது, 6 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து 18 வயது சிறுவன் மற்றும் மதுரை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பபட்டார். மற்ற 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

முன்விரோதமே காரணம்: எஸ்.பி. பேட்டி:

கருப்பசாமி கொலைக்கு முன்விரோதமே முழுக் காரணம் எனக் கூறியிருக்கிறார் மாவட்ட எஸ்.பி.ராஜாராமன். இந்த வழக்கு தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 2/7/2016 அன்று முகமது ரபீக்கின் இளைய மகன் அப்துல்லா கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவத்துக்கு பழி தீர்க்கும் வகையிலேயே கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலைக்கு லதா (33), மகாலட்சுமி (42), வாசமுத்து (38), பாக்கியராஜ் (31), யாஸ்மின் பானு (43) ஆகியோரும் 18 வயது சிறுவன் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளோம். துப்பாக்கியையும், 10 தோட்டாக்களையும் ரூ.1.2 லட்சம் கொடுத்து ரபீக் வாங்கியிருக்கிறார். 2 தோட்டாக்களை பயன்படுத்தி துப்பாக்கியை இயக்கப் பழகியிருக்கிறார். மூன்றாவது தோட்டாவால் கருப்பசாமியை கொலை செய்திருக்கிறார். இதுதவிர 7 தோட்டாக்களை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x