Published : 03 Sep 2022 06:30 AM
Last Updated : 03 Sep 2022 06:30 AM
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைப்பு பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன், முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப்பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஆசியாவின் 2-வது மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி ஹிலாரி இந்த நூலகத்தைப் பார்வையிட்டபோது, “இதுபோன்று பரந்து விரிந்த, மிக அதிகமான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை வேறு எங்கும் கண்டதில்லை” என்று கூறினார். ஆட்சி மாற்றத்துக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், நூலகத்தைப் பராமரிக்காததால் சிதிலமடைந்திருந்தது.
தற்போது, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, பராமரிப்பு பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு ரூ.32.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இம்மாதம் 30-ம் தேதிக்குள் பணிகள் முடிவடைய வேண்டும். பழுதடைந்த ஜெனரேட்டருக்குப் பதில் அதிக சக்தி கொண்ட புதிய ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தின் 7-வது தளத்தில் ஐம்பெரும் காப்பியங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஓலைச்சுவடிகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தற்போது 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து, கருணாநிதி நினைவிடப் பணிகள் எந்த அளவில் உள்ளது? என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர், “அப்பணிக்கென தனிப்பட்ட செயற்பொறியாளர் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நினைவிடத்தில் அமைக்கப்படும் பளிங்கு கற்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, ஒரு வாரத்துக்கு முன், துறை செயலர் மணிவாசன், செயற்பொறியாளர் ஆகியோருடன் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கற்களை எடுத்து வந்து முதல்வரின் அனுமதிக்கு கொடுத்தோம். முதல்வரும் அனுமதியளித்ததால், அக்கற்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT