Published : 17 Jan 2014 07:40 AM
Last Updated : 17 Jan 2014 07:40 AM

ஆண்டவா தி.மு.க.வுடன் கூட்டணி சேரணும்பா!- கோயில் கோயிலாக சிறப்பு பூஜைகள் செய்யும் காங்கிரஸ் நிர்வாகி

வருகிற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, “காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்க வேண்டும். அதன்மூலம் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என்று விரும்பி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறாராம் திருச்சி அருகேயுள்ள மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி.

திருச்சி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை ஏனோ பெரும்பாலும் மாநில கட்சிகள் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை. திருச்சி மக்கள வைத் தொகுதியில் இதுவரை தேசியக் கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியன தலா 4 முறையும், பாஜக 2 முறையும் வென்றுள்ளன.

மாநிலக் கட்சிகளில் திமுக 1980-லிலும், தமாகா 1996-லிலும், மதிமுக 2004-லிலும், அதிமுக 2009-லிலும் திருச்சி மக்களவைத் தொகுதியில் வென்றன. இதற்கிடையே 2001-ல் பாஜக மக்களவை உறுப்பினர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வென்றது. 1952-ல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தற்போதைய சூழலில், திருச்சி தொகுதியில் போட்டியிட மற்ற கட்சிகளைக் காட்டிலும் காங்கிரஸில் அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பலர் திமுகவுடன் கூட்டணி அமைய வேண்டும் என்றும், திமுகவுடன் கூட்டணி அமைந்தால் மட்டுமே எதிர்க் கூட்டணிக்கு கடும் சவாலை அளிக்க முடியும் என்றும் நம்பி, தங்களது நம்பிக்‘கை' நிறைவேற வேண்டும் என்று இஷ்ட தெய்வங்களை வேண்டி வருகின்றனராம்.

இந்த வரிசையில் ஜி.கே. வாசன் அணியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், பஸ் நிறுவன அதிபர் தர்மராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் முருகையாவின் மகன் ரவி முருகையா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.

ப.சிதம்பரம் அணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ், முன்னாள் மேயர் சுஜாதா, வாசன் மருத்துவமனைகளின் நிர்வாகி மருத்துவர் அருண் ஆகியோர் திருச்சியில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமன்றி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியில் திருச்சி மாநகர காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜும், புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான விஜயதாரணி ஆகியோரும் திருச்சி தொகுதி மீது கண் வைத்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி கலைக்கப்பட்டு, அந்த தொகுதியிலிருந்த கந்தர்வக் கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர், காங்கிரஸ்- திமுக கூட்டணி அமையும்பட்சத்தில் திருச்சியில் போட்டியிட ஒரு கண் வைத்துள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதேபோல, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான விஜயதாரணி, கடந்த சில மாதங் களாக திருச்சி பகுதியில் அவர் அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

1998-ல் இருந்து தற்போது வரை திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்களில் ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை, எல்.கணேசன், ப. குமார் ஆகியோர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்த முறையும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொகுதியை தங்களிடமிருந்து தட்டிப்பறித்து விடுவார்களோ என்று திருச்சியில் போட்டியிட முயற்சி செய்யும் உள்ளூர் மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x