Published : 20 Oct 2016 01:02 PM
Last Updated : 20 Oct 2016 01:02 PM
ரசாயனக் கலவையால் சுற்றுச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள், செயற்கை உரங்களால் நிலம், நீர் மாசடைவது போன்ற பாதிப்புகளை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தீபாவளி பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆர்கானிக் பட்டு சேலைகளை அறிமுகம் செய்துள்ளது.
வாழும் உயிருக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் மண்ணை பல்வேறு மாசுபாடுகளில் இருந்து காப்பது ஒவ்வொருவரின் கடமை. மண்ணை காத்தால்தான், மக்களைக் காக்க முடியும் என்பதால், மாறி வரும் நவீன உலகில், பலரும் ஆர்கானிக் உணவுகள் எனப்படும் இயற்கை முறை உணவுகளை நாடி விரும்பி சாப்பிட தொடங்கியுள்ளனர்.
இயற்கை முறை
இதன் அடுத்தக் கட்டமாக. செயற்கை ரசாயனங்கள் மற்றும் வண்ணங்கள். வேதி உரங்கள் இவையை புறம் தள்ளி விட்டு, இயற்கையான முறையில் பெறப்படும் நூலிழையாலான ஆர்கானிக் ஆடைகளான குறிப்பாக ஆர்கானிக் சேலைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. தமிழக அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் ஆர்கானிக் ஆடைகளை தீபாவளி பண்டிகையில் அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கியுள்ளது.
ஆர்கானிக் ஆடைகள்
இதுகுறித்து சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை மேலாளர் சரவணன் கூறியது:
ரசாயனம் சேர்க்கப்பட்ட ஆடைகளால் உடலில் ஏற்படும் தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் வருகிறது. ஆர்கானிக் உடைகளை அணியும்போது சரும பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. இதுதவிர எத்தகைய கோடையாக இருந்தாலும் உடலில் உஷ்ணம் தெரியாது; குளிர்ச்சியாக இருக்கும். துர்நாற்றமும் ஏற்படாது, நல்ல மணம் வீசும். அந்த வகையில் ஆரோக்கியத்தை விரும்புவோருக்கு ஏற்ற உடையாக ஆர்கானிக் ஆடைகள் உள்ளது.
தமிழக நெசவாளர்கள் தங்களின் சொந்தக் கைத்தறியில் இதனை நெய்வது சிறப்பு. கோவை. திருப்பூர். ஈரோடு. அரியலூர், சேலம். மதுரை. ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதல்கட்டமாக ஆர்கானிக் சேலைகள் நெய்யப்படுகின்றன. அதிலும். சிறுமுகை, வதம்பச்சோரி, சாவக்காட்டுபனையம் ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் சேலைகள் பிரபலமானது.
பல நிலைகளை கடந்து
தமிழகத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலும் இந்த சேலைகள் விற்கப்படுகின்றன. 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலான விலைகளில் ஆர்கானிக் சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வகை சேலைகள் தயாரிப்பது எளிதானதல்ல. பல நிலைகளைக் கடந்தே ஒரு சேலை உருவாகிறது, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆர்கானிக் பருத்தி தமிழகத்துக்கு கொண்டு வரப் படுகிறது. அவற்றை தனியார் நூற் பாலைகளில், நூலாக திரிக்கின்றனர்.
இயற்கை முறைச் சாய ஆலையில் தயாரிக்கப்பட்ட வண்ணச் சாயக் கரைசலில் நூலை மூழ்க வைத்து நிற மேற்றுகின்றனர். பின்னர், கரிசலாங் கண்ணி, அரளி, சங்குப்பூ, புளியமர கள்ளி, புளியம்பழம், செவ்வாழைப் பழம், கடுக்காய்ப்பூ, அவரை இலை, பலாசம் பூ, செண்டு மல்லி ஆகிய தாவரங்களை உலர வைத்து பொடியாக்கி, அதனை நீரில் ஊற வைத்து வண்ணச்சாயம் தயாரிக்கப் படுகிறது.
வெற்றிலைச் சாறு
நூலில் சாயம் ஏற்றிய பின், அதன் நிறம் மங்காமல் இருக்க வெற்றிலைச் சாற்றில் நனைத்து, பின்பு தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் கரைசலில் நனைத்து உலர வைக்கின்றனர். இந்த இயற்கை முறையிலான கலவைகளில் வரும் வண்ணங்களே துணிகளுக்கான நிறம். இந்த நிறம் சேர்த்துத் தயாராகும் நூலில் கைத்தறி மூலம் நெசவாளர்கள் சேலையை நெய்தால் மணமணக்கும் ஆர்கானிக் காட்டன் சேலைகள் தயாரிக்கப்படுகிறது. சாயம் தயாரித்த பின்னர் வீணாகும் நீர்கரைசலை கரும்புக்கு பாய்ச்சுவதால், விளைச் சலும் கூடுகிறது.மணமணக்கும் நறுமணத்துடன் ஆர்கானிக் சேலைகள் இருப்பதால் கல்லூரிப் பெண்கள் முதல் அனைத்து வயது வரையிலானவர்கள் விரும்பி அணிந்து வருகின்றனர்.
மாணவிகளிடையே ஆர்கானிக் சேலைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கல்லூரிகளில் அரங்குகள் அமைத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.
இளைய தலைமுறையைக் கவரும் வகையில் விரைவில் ஆண்களுக்கான வேட்டி, சட்டைகளையும் ஆர்கானிக்கில் தயாரிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது அனை வருக்குமான மகிழ்ச்சியான தகவல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நல்ல வரவேற்பு
சேலம் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சண்முகம் கூறும்போது, ‘‘ஆர்கானிக் சேலைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தினமும் நூறு சேலைகளுக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இயற்கை முறையிலான ரசாயன கலப்பில்லாத ஆடையை பலரும் விரும்பி அணிவதுடன், உடல் தொற்று நோய்க்கு உள்ளாகாத ஆரோக்கிய ஆடையாக இருப்பதால், இளைய தலைமுறையினர் அதிகம் ஆர்கானிக் சேலைகளை விரும்புகின்றனர்.
ஆர்கானிக்கில் மென் பட்டு சேலைகளும் இந்த தீபாவளிக்கு பெண்கள் பலரும் வாங்கி செல்கின்றனர். ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், முழு அளவிலான இயற்கை ஆடையுடன், இந்த தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடி மகிழலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT