Published : 02 Sep 2022 01:01 PM
Last Updated : 02 Sep 2022 01:01 PM
திருப்பூர்: ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றாலும் அங்கே அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும், திமுகவிற்கு எதிராக அதிமுக கடுமையாக களத்தில் போராடும் என்றும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொது பேசிய அவர், ''எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள், அதிமுக கொடி, அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இனி யாரும் கூக்குரல் இட முடியாது.
புதிய தெம்போடு திமுக வை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள். தென்மாவட்டங்கள் எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவாக உள்ளது. இப்பொழுதும் அப்படித்தான் உள்ளது. மேலும் இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை எப்பொழுதும் ஒற்றை தலைமைதான்.'' என்றார்.
சசிகலா மீது சட்ட நடவடிக்கை: சசிகலா இன்னும் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ''கட்சி இன்னார் தான் வழிகாட்ட வேண்டும் என நீதிமன்றம் சொன்ன பிறகும் சசிகலா கட்சிக் கொடியை கட்டிக்கொண்டு இருந்தால் அது தவறு தான். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர் கூறுகையில், ''திமுகவிற்கு எதிராக இனி கடுமையாக அதிமுக களத்தில் போராடும். இதுவரை தலைமை குழப்பம் இருந்த நிலையில் இனி எடப்பாடி பழனிசாமி தான் தலைமை என்றபோது கடுமையாக போராடுவோம்.
இனிமேல் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்'' எனத் தெரிவித்தார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT