Published : 02 Sep 2022 12:05 PM
Last Updated : 02 Sep 2022 12:05 PM
சென்னை: நீட் தேர்வில் தோல்வி அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதை அடுத்து நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி ராஜலட்சுமி ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்.
ஏற்கெனவே பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும். இதை புரிந்துகொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்; மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT