Published : 02 Sep 2022 09:10 AM
Last Updated : 02 Sep 2022 09:10 AM

நெல்லுக்கான ஊக்கத் தொகை அறிவிப்பு: காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அதிருப்தி

தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத் தொகை ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் கூறியது:

திமுக தனது தேர்தல் அறிக்கையில், குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

ஆனால், தமிழக அரசு ஆக.30 அன்று சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தி ரூ.2,060 எனவும், சாதா ரக நெல்லுக்கு ரூ.75 உயர்த்தி ரூ.2,040 எனவும் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இதேபோல, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவினங்களோடு 50 சதவீதம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், அதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கேரளா மாநிலத்தில் குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,840-ம், சத்தீஸ்கர் மாநிலத்தில் குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,540-ம் வழங்கப்படுகிறது.

ஆனால், மத்திய, மாநிலஅரசுகள் தமிழக விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.

கடந்தாண்டைவிட பெட்ரோல், டீசல், விதை, உரம் போன்றவற்றின் விலை உயர்வு, விவசாய இயந்திரங்களின் வாடகை உயர்வு, விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு சாகுபடி செலவும் உயர்ந்துள்ளது.

எனவே, தமிழக அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள ஊக்கத் தொகையை உடனேமறுபரிசீலனை செய்து, உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x