Published : 05 Oct 2016 03:07 PM
Last Updated : 05 Oct 2016 03:07 PM

உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி இன்று முறையீடு செய்யப்படவுள்ளது.

‘உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப் படவில்லை. எனவே, உரிய இடஒதுக்கீடு முறைகளை இந்தத் தேர்தலில் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக் கீடு ஆணைகளை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’ என கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று முன்தினம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை உரிய விதிமுறைகளை பின்பற்றி முறை யாக வெளியிடப்படவில்லை. எனவே, தேர்தல் தேதி (அக்டோபர் 17, 19) தொடர்பான அறிவிப் பாணை ரத்து செய்யப்படுகிறது. புதிதாக தேர்தல் அறிவிப்பா ணையை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனை நடந்துவந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. அதன்படி, தமிழக உள்ளாட்சித் தேர்தலை வரும் 24-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டி ருந்தார்.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தேர்தல் தொடர்பான அறிவிப்பா ணைகளை எப்போது வெளியிட வேண்டும், எப்படி வெளியிட வேண்டும் என்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசிலயமைப்பு சட்ட விதிகளின்படி தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை.

இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையே பழங்குடியி னருக்கான இடஒதுக்கீடு சம்பந்தப் பட்டதுதான். மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஒருபோதும் கோரவில்லை. ஆனால், இடஒதுக் கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப் பித்த ஆணைகளை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ள தனி நீதிபதி, தேர்தல் குறித்த அறிவிப் பாணையை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இது முன்னுக் குப்பின் முரணாக உள்ளது.

மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டு தேர்தல் தொடர்பான நடவடிக்கை களை தொடங்கிய பிறகு, அதில் வேறு யாரும் தலையிட முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்த ரவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளோம். இந்த மனுவை நாளை (இன்று) அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்ய உள்ளோம். இந்த விவகாரத் தில் நாங்கள் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு போதிய அவகாசம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல், செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கி, கடந்த 3-ம் தேதியுடன் முடிந்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இன்று (6-ம் தேதி) மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தேர்தல் அறிவிக்கைகளை ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் சில பகுதிகளில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடந்ததாகவும், சில மாவட்டங்களில் மனுக்கள் வாபஸ் பெறும் பணிகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரி களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டாம்’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x