Published : 01 Sep 2022 03:22 PM
Last Updated : 01 Sep 2022 03:22 PM
புதுச்சேரி: "புதிய மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தருவோம்" என்று புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் இன்று அவர் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு பூர்வாங்க அனுமதி அளித்துள்ளது. பெரிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவர முகாந்தரம் இல்லை. இதனால் புதுச்சேரி இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரியவில்லை.
புதுச்சேரியில் போதியளவு மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் உற்பத்தியாகும் மதுவால், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கணவரை இழந்த பெண்கள் உள்ள மாநிலமாக புதுவை காட்டப்படுகிறது. அப்படியிருக்க, புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இங்கு உற்பத்தியாகும் மது எங்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கடத்தல்தான் அதிகரிக்கும்.
மதுபான ஆலை அனுமதியில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக எம்எல்ஏக்களே புகார் கூறியுள்ளனர். அதற்கும், இந்த அரசு பதிலளிக்கவில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுக்கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லிக்கு ஒரு நீதி, புதுச்சேரிக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்புகிறோம். இதில், ஆளுநரின் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் ஹோலோகிராம் மோசடி உட்பட முறைகேடு நடந்ததாக மூடப்பட்ட மதுபானத் தொழிற்சாலைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. முறைகேடுகள் பற்றி எந்தவித விசாரணையும் இல்லாமல் எப்படி அனுமதி வழங்கப்பட்டது பற்றியும், புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆளுநர் தரப்பில் நடவடிக்கை இல்லாவிட்டால், காங்கிரஸ் சார்பில் சிபிஐக்கு நேரடியாக மனு அளிப்போம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT