Published : 01 Sep 2022 02:56 PM
Last Updated : 01 Sep 2022 02:56 PM
சென்னை: "கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து, அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற யாருக்குமே மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் தரக்கூடிய ஒன்றாக உள்ளது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்துவரும்போது, நீதிமன்றம் அவசர அவசரமாக கருத்து கூறியிருப்பது, அவசியமற்றது இது எங்கேயும் நிகழாது.
அதன்பின்னர் நீதிபதிகள் அங்கு கள ஆய்வுக்கு செல்கின்றனர். நீதிபதிகள் கள ஆய்வுக்கு செல்லும்போது நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவிப்பது எவ்வளவு அவசியமற்றது, அது எவ்வளவு தவறான முன்னுதாரணமாக போகும் என்பதை கவனிக்க வேண்டும்.
நீதிபதிகள் விசாரணை, நடந்துகொண்டிருக்கும் சிபிசிஐடி விசாரணையின் முடிவுகள் இந்தக் கருத்தை ஒட்டித்தான் வரும். முதலில் கருத்தை அறிவித்துவிட்டு விசாரணை என்பது, எவ்வளவு வேடிக்கையானது. அது இதுவரை எங்குமே நிகழாதது.
உச்ச நீதிமன்றமே என்றாலும்கூட பிணை கோரினால், பிணை கொடுக்க வேண்டுமே தவிர அதற்காக தீர்ப்பையே கொடுப்பது எப்படி சரியாக இருக்கும். அது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றமே அதை வலியுறுத்தியிருக்கிறது. பிணை கேட்டால் பிணை கொடுக்க வேண்டும், வழக்கின் சாராம்சத்தையொட்டி தீர்ப்பையே வெளியிடுவது எப்படி சரியாக இருக்கும்.
எனவே, இது மிகப்பெரிய தவறு. மிகப் பெரிய தவறான முன்னுதாரணம். கடைசி நம்பிக்கையாக நமக்கு இருப்பது நீதிதான். கடவுளின் அவதாரங்களாக நீதிபதிகளை மக்கள் பார்க்கின்றனர். அவர்கள் இதுபோன்ற முடிவெடுப்பது என்பது மிகுந்த மனச்சோர்வை தருகிறது. அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற யாருக்குமே மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் தரக்கூடிய ஒன்றாகத்தான் இதை நான் பார்க்கிறேன்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று கூறியிருந்தது. இதை முன்வைத்தே சீமான் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT