Published : 01 Sep 2022 01:20 PM
Last Updated : 01 Sep 2022 01:20 PM
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடக் கூடாது.
ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4465 போக்சோ வழக்குகள். 69 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 99.25% பெண் குழந்தைகள்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த காலங்களில் பாமக எழுப்பிய புகார்களை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.
பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் ஒரு மாநில அரசின் முதன்மைப் பணியாகும். அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT