Published : 01 Sep 2022 12:18 PM
Last Updated : 01 Sep 2022 12:18 PM
மதுரை: சமூக வலைதளத்தில் நீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் சமூக வலைதளத்தில், நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார். இதற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.
சவுக்கு சங்கர் கூறும்போது, ''பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததற்கான காரணமாக கூறும் வீடியோ பதிவுகளையும் சமூக வலைதள பதிவுகளும் தனக்கு வழங்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், ''அந்த வீடியோ பதிவுகள் மற்றும் இதர பதிவுகள் உங்களிடமும் இருக்கும். நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக நீங்கள் தெரிவித்தது உண்மையா?'' என்றனர்.
அதற்கு, சவுக்குசங்கர், ''நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். எனக்காக வேறு வழக்கறிஞர்கள் வாதாடும் பொழுது அவர்களின் தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் நானே இந்த வழக்கில் வாதாட விரும்புகிறேன்'' என்றார்.
நீதிபதிகள், ''சட்ட உதவி ஆணைக்குழு மூலம் வழக்கறிஞர்கள் நியமிக்க விரும்புகிறீர்களா?'' எனக் கேட்டனர். ''என் சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவனை நியமிக்க விரும்புகிறேன்'' என சங்கர் கூறினார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.8-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT