Last Updated : 01 Sep, 2022 12:09 PM

1  

Published : 01 Sep 2022 12:09 PM
Last Updated : 01 Sep 2022 12:09 PM

பாம்பாறு அணை 4வது மதகில் உடைப்பு: அதிகளவில் நீர் வெளியேறியதால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையின் 4வது மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறியது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் 4வது மதகு உடைந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை கடந்த 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணைக்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீரும், பெனுகொண்டாபுரம் ஏரியில் மூலம் வரும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரும், நீர் ஆதராமாக உள்ளது. இந்த அணையில் 280 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

இந்த, அணை தண்ணீர் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றாம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரிய பெருமாள்வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர் விளை நிலங்களும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாபோட்டை, வேடக்கட்டமடுவு மேல்செங்கம்பாடி, ஆண்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் 1499 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

4வது முறை நிரம்பியது: பாம்பாறு அணை நிகழாண்டில் மட்டும் முழு கொள்ளளவான 19.80 அடியை 4 முறை எட்டியுள்ளது. தற்போது ஜவ்வாது மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வந்துக் கொண்டிருந்த 5250 கனஅடி தண்ணீரும், 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து படிபடி குறையாக தொடங்கியதால், மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இரும்பு ரோப் பழுது: இந்த நிலையில் நேற்று இரவு(ஆக.31-ம் தேதி) பாம்பாறு அணையில் 4வது மதகு ஏற்றி இறக்குவதற்கான இயந்திரத்தின் பேரிங் பழுதான நிலையில், இரும்பு கயிறு அறந்து, மதகு முழுவதும் மேல் நோக்கி உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 6000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.

இதனால், பாம்பாறு அணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூர் அணைக்கு செல்கிறது. தற்போது மதகின் இரும்பு ரோப் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடித்து செல்லப்பட்ட மீன்கள்: பாம்பாறு அணையில் 80 லட்சத்திற்கு மேற்பட்ட பலவகையான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக அணையில் 16 யூனிட் வலைகள் அமைக்கப்படடுள்ளது. தற்போது அணையின் மதகு உடைந்து மீன்களுடன் தண்ணீர் வெளியேறியதால், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் வேதனை: அணையில் 280 மில்லியன் கனஅடி(19.80 அடி) தண்ணீரில், தற்போது 122 மில்லியன் கனஅடி(10.84 அடி) தண்ணீர் உள்ளது. 155 மில்லியன் கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேறியது. அணைக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3815 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மதகு உடைந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அணையில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மதகு உடைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

3 நாட்களில் சீரமைக்கப்படும்: இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறும்போது, அணையின் 4 மதகில் ரோப் பேரிங் பழுது காரணமாக, இரும்பு கயிறு துண்டாகி உள்ளது. இந்த மதகு 3 நாட்களில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தண்ணீர் சேமித்து வைக்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x