Published : 01 Sep 2022 09:58 AM
Last Updated : 01 Sep 2022 09:58 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்று இரவு (ஆக்.31) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சொக்கநாதன்ம் புத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே குலாலர் தெருவில் விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சப்பரம் பேருந்து நிலையம் அருகேசென்றபோது இடதுபுறமாக திரும்பியது. அங்கிருந்த பெரிய மரத்தின் மீது மோதி நின்றுள்ளது. பின்னர் சப்பரத்தை வலது புறமாக திருப்பும் பொழுது அருகே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு சப்பரத்தில் சாய்ந்த்து. அப்போது ஃபிளக்ஸ் போர்டு மின் கடத்தியிலும் உரசியது. இதனால் மின்சாரம் சப்பரத்திலும் பாய, ஊர்வலத்தில் சென்ற சொக்கநாதன் புத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரன் (24), மாரிமுத்து (33), செல்வகிருஷ்ணன் (32), செல்லப்பாண்டி (42) ஆகியோர் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சொல்லப்பட்ட சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பலனின்றி மாரிமுத்துவும், முனீஸ்வரனும் உயிரிழந்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி, தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் தேரில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த பிரகதாம்பாள் கோயில் தேர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு தேர் விபத்து நடந்துள்ளது. விநாயகர் ஊர்வலத்தில் நடந்த விபத்து சொக்கநாதன் புத்தூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT