Published : 31 Aug 2022 03:36 PM
Last Updated : 31 Aug 2022 03:36 PM
மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை.
இந்நிலையில், தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்".என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன் பிறப்பித்த உத்தரவு: "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்" என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT