Published : 09 Oct 2016 12:49 PM
Last Updated : 09 Oct 2016 12:49 PM

கோவை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்: விநியோகத்தை முறைப்படுத்த கோரிக்கை

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதி மக்கள் குடிநீர்ப் பற்றக்குறையால் தவிக்கின்றனர். அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 105 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட கோவை மாநகராட்சியில், 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டலம் என 5 மண்டலங்களில், 100 வார்டுகள் உள்ளன.

மாநகராட்சியைப் பொறுத்தவரை, சிறுவாணி, பில்லூர் குடிநீர்த் திட்டம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி குடிநீர்த் திட்டம் மூலம் 80 எம்.எல்.டி. (மில்லியன் லிட்டர்) தண்ணீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டது. எனினும், தற்போது சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், சுமார் 59 எம்.எல்.டி. மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இது புளியகுளம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம், வடகோவை, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பில்லூர் குடிநீர்த் திட்டம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 65 எம்.எல்.டி. அளவுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில், பில்லூர் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது. வழியோரக் கிராமங்களின் பயன்பாட்டுக்குப்போக, மீதம் சுமார் 55 எம்.எல்.டி. தண்ணீர் கோவை நகருக்கு கிடைக்கும்.

இதையடுத்து, 2007-ல் ரூ.114 கோடியில் பில்லூர் 2-வது குடிநீர்த் திட்டம் தொடங்க நிதி ஒதுக்கப்பட் டது. 2009-ல் பணிகள் தொடங்கின. பில்லூர் அணைக்கட்டுப் பகுதியில், வெள்ளியங்கிரியில் தண்ணீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கணபதி ராமகிருஷ்ணா புரம் வரை உடையாத உலோக பைப்புகள் அமைக்கும் பணியும் 2011-ல் முடிவடைந்தது. மேலும், 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டது. ஆனால், அணைக்கப்பட்டுப் பகுதியில் 100 மீட்டர் ஆழம்கொண்ட கிணறு தோண்டும் பணியில் ஏற்பட்ட தாம தத்தால், இப்பணி முற்றுப்பெற வில்லை. இதற்கிடையில், இப்பணிக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரித்தது. எனினும், இப்பணிகள் வேகப்படுத்தப்படவில்லை.

பின்னர், பணிகள் தொடங்கி, கணபதி ராமகிருஷ்ணாபுரத்தி லிருந்து பீளமேடு வழியாக ஜெயவர்த்தனவேலு நகர் தொட்டி வரை குழாய் அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது. கடந்த 5 ஆண்டுகளாக இப்பணி வேகமாக நடைபெறவில்லை என்று புகார்கள் எழுந்தன.

இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியிருந்தால் ஏறத்தாழ 190 எம்.எல்.டி. தண்ணீர், பில்லூர் குடிநீர்த் திட்டம் மூலம் கிடைத்திருக்கும். ஆனால், தற்போது இத்திட்டத்தில் சுமார் 90 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

15 நாட்களுக்கு ஒருமுறை?

பீளமேடு, ஹோப் கல்லூரி, தண்ணீர்பந்தல், மசக்காளி பாளையம், அண்ணா நகர், பீளமேடு புதூர், சவுரிபாளையம், உடையார்பாளையம், சிங்காநல் லூர், பாப்நாயக்கன்பாளையம், ராமநாதபுரம், கணபதி, கவுண்டம் பாளையம், சரவணம்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. சில பகுதி களில் ஒரு வாரத்துக்கு ஒருமுறையே தண்ணீர் விடப்படுகிறது. ஒண்டிபுதூர், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி உள்ளிட்ட பகுதிகளில் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக் கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் தின் தரப்பை விசாரிப்பதற்காக, மாநகராட்சி ஆணையரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. மாநகராட்சி முழுவதும் சீரான முறையில் குடிநீரை விநியோகித்து, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

அலட்சியமே காரணம்…

இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திக் கூறும்போது, “குடிநீர்ப் பிரச்சினைக்கு மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கே முக்கியக் காரணம். அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதுகுறித்து கடந்த ஜூன் 22-ம் தேதி சட்டப்பேரவையில் நான் பேசினேன். சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீரை விநியோகிக்கின்றனர்.

எனவே, அனைத்து வார்டுகளுக்கும் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை விநியோகிக்க வேண்டும். மேலும், 15 வார்டுகளுக்கு ஒரு உதவிப் பொறியாளர் மட்டுமே பணியில் உள்ளதால், அவர்களால் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த முடியவில்லை. எனவே, தேவையான அளவுக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து, குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சியில் பேச கவுன்சிலர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. இன்னும் 50 எம்.எல்.டி. தண்ணீர் இருந்தால், அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீரை விநியோகிக்க முடியும். அதுமட்டுமின்றி, மேடான பகுதிகளுக்காக பூஸ்டர் அமைத்தல் மற்றும் நவீன முறைகளைப் பின்பற்றி, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

2010-ம் ஆண்டில், நகரில் 48 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைக்கக் கோரி, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணாவிட்டால், மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவேன்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x