Published : 31 Aug 2022 04:42 AM
Last Updated : 31 Aug 2022 04:42 AM
சென்னை: ‘ஏழைகள் ரதம்’ என்னும் ‘கரீப் ரத்’ ரயில்களுக்காக, புதிய எகானமி 3ஏசி பெட்டிகள் தயாரிப்பு சென்னை ஐ.சி.எஃப்-ல் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 723 பெட்டிகளைத் தயாரித்து வழங்க ஐ.சி.எஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரயில் போக்குவரத்து வசதிக்காக, ‘கரீப் ரத்’ என்னும் ‘ஏழைகள் ரதம்’ ரயில் 2006-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு வழித்தடங்களில் 48 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இந்த ரயில்கள் எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு குறைக்கப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் 26 ஜோடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ‘கரீப் ரத்’ ரயில்களை மேம்படுத்தி, குறைந்த கட்டணத்தில் எகானமி ஏசி வகுப்புபெட்டிகள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சென்னை ஐ.சி.எஃப்-பில் இந்த ரயில்களுக்கான புதிய பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.சி.எஃப்-பில் ‘கரீப் ரத்’ என்று அழைக்கப்படும் ‘ஏழைகள் ரதம்’ ரயில்களுக்கான ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணி தொடங்கிஉள்ளது. இந்த ரயில் தொடர்களில் அனைத்து ரயில் பெட்டிகளும் குளிர் வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு ரயில் பெட்டிகளாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் ஏசிவசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய வசதியாக இருக்கும். நடப்பு உற்பத்தி ஆண்டில் அதாவது, அடுத்த ஆண்டுமார்ச் மாதத்துக்குள் 723 குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எகானமி ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கமான மூன்றடுக்கு குளிர்சாதன வசதி ரயில் பெட்டிகளில் 72 படுக்கைகள்தான் இருக்கும். ஆனால், இந்தப் பெட்டிகளில் 83 படுக்கைகள் இருக்கும்.
ரயில் பெட்டியில் உள்ள வசதிகள்
மூன்றடுக்கு குளிர்சாதன வசதி ரயில்களில் பெட்டிகளைப் போலஅல்லாமல், இந்த ரயில் பெட்டிகளில் ஒவ்வோர் படுக்கைக்கும் தனியாக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டிருக்கும்.மேலும்,ஒவ்வோர் படுக்கைக்கும் தனியாக மொபைல் சார்ஜிங், படிப்பதற்கான விளக்குகள் மற்றும் அறிவிப்பு வசதிகளும் இருக்கும். இதுதவிர, ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். படுக்கைகளுக்கு இடையே கூடுதல் இடவசதி இருக்கும்.
எகானமி வகுப்பு பெட்டிகள் மூலமாக, அதிக அளவில் ரயில் பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெட்டிகள் முதல்முறையாக ஐ.சி.எஃப்-பில் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT