Published : 31 Oct 2016 07:39 PM
Last Updated : 31 Oct 2016 07:39 PM
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ஞாயிறு அன்று பெய்த சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொடங்கி சிறுமுகை, செங்கப்பள்ளி, அம்மன்புதூர், கூத்தாமண்டிப் பிரிவு, லிங்காபுரம், காந்தவயல் என 20 கிமீ தொலைவில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் பவானி நதிக்கரையோரமும், பவானி சாகர் நீர்த்தேக்கப்பகுதியையும் சார்ந்து இருக்கின்றன. இந்த கிராமங்களில் வாழை விவசாயமே பிரதானமாக உள்ளது.
குறிப்பாக கேரளத்திற்கு செல்லும் நேந்திரன் வாழைகளே இங்கே பயிரிடப்பட்டுள்ளன. 11 மாத பயிரான வாழை 10 மாதங்கள் கடந்து குலை தள்ளி 3 வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில்தான் ஞாயிறு இரவு இப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதில் அத்தனை வாழைகளும் குலையுடன் முறிந்துள்ளது. இப்படி சேதப்பட்ட வாழைகளின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்தை தாண்டும். இதற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது.
'ஒரு ஏக்கரில் 900 வாழைகள் வைக்க முடியும். ஒரு வாழை வைத்து பராமரித்து இந்த அளவுக்கு கொண்டு வர ரூ.80 முதல் ரூ.100 வரை செலவு செய்துள்ளோம். இதை 3 வாரங்கள் கழித்து வெட்டினால் வியபாரிகள் ரூ.250 முதல் ரூ.300 வரை எடுத்துச் செல்வார்கள். இந்த வாழைகள் குலை தள்ளிய நிலையில் இருந்ததால் நல்ல எடையுடன் இருந்தது. அதனால் பலத்த காற்று வீசியவுடன் குலையுடன் தலைமுறிந்து ஒரே மாதிரி சேதமடைந்துள்ளது. இங்கே இந்த ஆண்டு முழுக்க மழையில்லை.
மழையில்லாவிட்டாலும் பவானி நதிக்கரையோரமும், பவானி நீர்த்தேக்க பகுதியிலும், பொதுப்பணித்துறை குத்தகை நிலத்திலும் பயிர் செய்திருந்ததால் இது தப்பிப் பிழைத்திருந்தது. இப்போது அடித்ததுதான் முதல் பருவமழை. அதுவே இப்படி எங்கள் பிழைப்பில் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த வாழைத்தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து அழிச்சாட்டியம் செய்து வந்தன. அதை ஒரு பக்கம் விரட்டி அடித்துக் காவல் காத்தோம். அப்படி யானைகள் புகுந்தால் கூட ஒரு குறிப்பிட்ட தோட்டத்தில் 100 முதல் 150 வாழைகள் வரை சேதமடையும். அதை விரட்டியும் விட்டு விடலாம். ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான வாழைகள் சேதமடையாது.
இந்த ஆண்டுதான் வாழை விவசாயத்திற்கு பயிர்க்கடன் பெறும்போது இன்சூரன்ஸ் எடுத்தோம். இந்த வாழைகள் சென்ற ஆண்டு விதைப்பு செய்ததால் அந்த இன்சூரன்ஸிற்கும் பொருந்தாது. இப்போது இந்த வாழைகளை தோப்பிலிருந்து அகற்றிவிட்டு புதிதாக பயிர் செய்ய நிலத்தை தயார் செய்ய வேண்டுமானால் கூட ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி வரும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு வருவாய்த்துறையினர் இதை கணக்கெடுத்து எங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்!' என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT